பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கற்றலுக்குச் சாதகமான ஏதுக்கள்

கற்கும் விஷயத்தில் கற்போன் சிறந்த ஊக்கம் கொள்ள வேண்டும். இவ்வூக்கம் இல்லாவிடில் நற்பயன் கிட்டாது. கற்றல் அனைத்தும் நோக்கமுடையதே. உடனோ, பின்னரோ ஏற்படும் பயனைக் குறிக்காத கற்றலே இல்லை. நோக்கம் அவசரமானதும் திட்டமானதுமாக இருந்தால், கற்றல் விரைவாக நடைபெறும்; நோக்கம் தெளிவற்றிருந்தால் கற்றல் மெதுவாகவே நடைபெறும். தற்காலப் பள்ளிகளில் இப்பயனைப் பெறுவதற்குத் தன்னோக்க முயற்சி முறை[1]யைக் கையாளுகின்றனர், ஆசிரியரின் துணைகொண்டு சிறுவர்கள் தோட்டவேலை போன்றதைத் திட்டம்போட்டு நிறைவேற்று வதில் பல செய்திகளை ஊக்கத்துடன் கற்கின்றனர். கற்க வேண்டுமாயின், கவர்ச்சியுண்டாகி, கவனம் ஒருமுகப்பட்டு ஆழ்ந்த முயற்சி உண்டாக வேண்டும் என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர். பரிசுகளும் தண்டனைகளும் கற்றலைத் தூண்டுகின்றன. அதுபற்றியே பள்ளிகளிலும் தொழிலகங்களிலும் இவ்வுத்திகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. தற்காலத்தில் கல்வித்துறையிலும் தொழிற்சாலையிலும் முறையே சிறுவனும் தொழிலாளியும் தம்முடனே தாம் போட்டியிட்டுத் தாம் ஏற்கெனவே சாதித்ததைவிட அதிகம் சாதிக்க முயன்று சிறந்த தேர்ச்சி பெறுகின்றனரென்பது அண்மைக் கால ஆராய்ச்சி யினின்றும் அறியக்கிடக்கின்றது. மந்த மாணாக்கன் தன் வகுப்பிலுள்ள மேதையுடன் போட்டி போடமுடியாது என்பது தாம் அறிந்ததே. அதற்கு அவனுக்குத் துணிவும் உண்டாகாது. ஆனால், தன்னுடன் போட்டியிட்டுத் தான் முன்பு சாதித்த்தை விட அதிகமாகச் செய்ய முயன்று வெற்றியடைகின்றான். மேதை மற்றச் சிறுவர்களுடன் போட்டியிட அதிக முயற்சி வேண்டாததுபற்றி வாளா இராமல் முன்பு தான் அடைந்த நிலையைவிட உச்சநிலையைப் பெற; ஆசிரியர்களால் இப் பொழுது ஏவப்பெறுகின்றான். இஃது அவனுக்குத் துரண்டு கோலாகி, அவன் தன் அறிவைப் பெருக்கிக் கொள்ளுகின்றான். தொழிற்சாலைகளிலும் வல்லுநர்கள் தங்கள் திறமையை இம் மாதிரியே மேம்படுத்திக் கொள்ளுகின்றனர்.

கற்றல் விதிகள்

தார்ன் டைக் என்ற அமெரிக்க நாட்டுக் கல்வி அறிஞர் பிராணிகளும் மனிதர்களும் கற்கும் செயலைப்பற்றி மூன்று


  1. தன்னோக்க முயற்சி முறை-Project method