பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

கல்வி உளவியல் கோட்பாடுகள்


காண்பிப்போர் வாழ்க்கையின் பல துறைகளில் சிறப்பாகத், திகழ்வர் எனவும் கருதப்பெற்றது.

மேற்கூறிய பிரச்சினை பள்ளி வேலையைப் பெரிதும் பாதிக் கின்றது. இக் கொள்கையின்படி பயிற்றல் மதிப்புடைய பாடங்களே பள்ளிகளில் கற்பிக்கப்பெறுதல் வேண்டும்; இடம் பெறுதலும் வேண்டும். உடலுக்குப் பயிற்சி தருவதுபோல உள்ளத்திற்கும் பயிற்சி தரும் முறையில் இவற்றைக் கற்பிக்க வேண்டும். இக் கொள்கையில் இரண்டு பிழையான வாதங்கள்[1] உள்ளன: ஒன்று, உள்ளத்தின் பெற்றிபற்றிய கொள்கை; இரண்டு, தசை வளர்ச்சியைப்போல் உளச்செயலும் வளர்ச்சி பெறல் என்ற கருத்து. இன்றைய உளவியல் பெற்றி உளவியலை ஒப்புக் கொள்வதில்லை. சிந்தனை, நினைவு, உற்று நோக்கல் போன்றவை தனித்தனி பெற்றிகளாக இருப்பின், பயிற்சி மாற்றம் ஏற்படுவதெங்ஙனம்? இதுபற்றிய வாத, எதிர்வாதங் களை உள நூல்களில் கண்டு தெளிக.

பயிற்சி மாற்ற அளவு: சில நிபந்தனைகளின்கீழ் ஓரளவு பயிற்சி மாற்றம் இருக்கத்தான் செய்கின்றது. ஒருகால் கணித அடிப்படைச் சிந்தனை, வரலாற்று அடிப்படைச் சிந்தனைக்குத் துணையாகாமற் போகலாம்; ஆனால், அஃது அறிவியல் அடிப்படைச் சிந்தனைக்கு நிச்சயம் ஒரளவு துணை புரியத்தான் செய்கின்றது. ஒரு பாடத்தில் மேற்கொள்ளப்பெறும் முறைகள் இன்னொரு பாடத்திற்கு மேற்கொள்ளப்பெற்றால் ஒரளவு பயிற்சி மாற்றம் இருக்கும். எனவே, அறிவியல் ஆராய்ச்சி முறைகள், சான்றுகளை மதிப்பிடல், முடிவுகளைச் சோதித்தல் போன்றவை வரலாற்று ஆராய்ச்சியில் பயன்படலாம். இதற்கு மாணாக்கர்கள் அம் முறைகளை நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும்; அவற்றின் உட்பொருளை அறிந்து கொண்டிருக்கவும் வேண்டும்.

இயக்கக் கற்றலாயினும் சரி, சொல்முறைக் கற்றலாயினும் சரி இம் மாற்றம் (1) பொருள்களொப்புமையாலும்[2] (2) துறை துணுக்க ஒப்புமையாலும்[3] (3) விதி[4] களொப்புமையாலும், அல்லது (4) இவற்றின் தொகுதியாலும் ஏற்படுகின்றது என்று கண்டறிந்துள்ளனர்.

அண்மைக்காலத்தில் எந்த அளவுக்குப் பயிற்சி மாற்றம் ஏற்படுகின்றது என்பதை அறியப் பல சோதனைகள் மேற் கொள்ளப்பெற்றுள்ளன. ஒரு சோதனையை இவண் கூறுவோம்.


  1. பிழையான வாதங்கள்-Fallacy
  2. ஒப்புமை-Similality.
  3. துறை துணுக்க ஒப்புமை-Technique.
  4. விதி-co-Principle.