பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பயனைப் பெறவேண்டுமாயின் அப்பாடத்திற்கும் பிற பாடங் களுக்குமுள்ள தொடர்பை ஆசிரியர் வற்புறுத்தவேண்டும்; மாணாக்கர்களையும் அதைக் காணத் தூண்ட வேண்டும். இஃது உடன்பாட்டுப் பயிற்சி மாற்றம்[1] என வழங்கப்பெறும். இதை யாவரும் ஒப்புக்கொள்வர். காரணம், எதைக் கற்பதற்கும் ஓரளவு அறிதிறன் வேண்டும். இவ்வறிதிறன் பொதுக்கூறு மாற்றத்திற்கு இடம் உண்டு.

(3) எதிர்மறைப் பயிற்சி மாற்றமும்[2] நடைபெற ஏதுவுண்டு. தாய்மொழிப் புலமை அந்நிய மொழிப் புலமையை ஓரளவு கெடுக்கும். காரணம், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிவீறு உண்டு. ஒன்றன் தனிவீறினைப் பின்தொடர்ந்து அதை மற்றொன்றில் புகுத்தினால் இரண்டாவது மொழியின் தனித் தன்மை ஓரளவு கெடும் என்பதற்கு ஐயமில்லை. இந்திய மாணாக்கர்கள் தம் ஆங்கிலக் கட்டுரைகளில் இந்திய ஆங்கி லத்தைக் (Indianism) கையாளுவதை ஆங்கிலப் புலவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டுவர். இங்கனவே வளைத்தடிப் பந்தாட்டத்தில்[3] சிறந்த தேர்ச்சி பெற்றவர் பந்தடியாட்டத்தின்: மென்கையான அடிகளைக் கையாள முடிவதில்லை. ஒரு துறையில் பெற்ற பயிற்சி பிறிதொரு துறைக்கு இடையூறாகவும் முடியலாம்.

(4) பயிற்சி மாற்றம் பொருளொப்புமையாலும், துறை துணுக்க ஒப்புமையாலும் விதிகளொப்புமையாலும் அல்லது இவற்றின் தொகுதியாலும் ஏற்படுகின்றது. ஆகவே, ஆசிரியர் கற்பிக்கும் செய்திகளுடன் முறைகளையும் உண்மைகளையும் வலியுறுத்திக் கற்பிக்க வேண்டும்.

(5) நுட்பமாகக் கற்போர் தன் உள்ளுணர்வைக் (Intuition) . கொண்டு சிறந்த பயிற்சி மாற்றத்தை அடைவர். நம் அநுபவத்தில் பல எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

(6) மனப்பயிற்சி தருகிறதாக எண்ணி எப்பாடத்தையும் கல்வி ஏற்பாட்டில் சேர்ப்பது தவறு. பாடத்தின் தனிப் பயனைக் கருதியே அதனைச் சேர்க்க வேண்டும்.

(7) பயிற்சி மாற்றத்திலும் தனியாள் வேற்றுமைகள் உண்டு. இதை உணர்தல் அவசியம்.


  1. உடன்பாட்டுப் பயிற்சி மாற்றம்-Positive transfer.
  2. எதிர்மறைப் பயிற்சி மாற்றம்-Negative transfer.
  3. பந்தடியாட்டம்.Tennis.