பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பைகார்பனேட் கரைசலைச் சற்று வெதுவெதுப்பான நிலையில் பீச்சாங்குழலினால் காதினுட் செலுத்திக் குறும்பியை நீக்க வேண்டும். இத்தகைய சிகிச்சைக்கு முன்னர் இரண்டு மூன்று இரவுகள் காதில் சில துளி ஹைடிரஜென் பெர்ஆக்ஸைடை விட்டு வைப்பது நல்லது. சோற்றுப்புப் படிகம் ஒன்றைத் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயை வெது வெதுப்பான நிலையில் ஊற்றலாம். இதனால் கல்போல் கெட்டிப்பட்ட குறும்பி ஊறிவிடும். இதை எளிதாக நீக்கி விடலாம்.

காதுக்கொப்புளம் புறச்செவிக் குழலில் எழும். இதனால் குத்தல் வலி அதிகமாக இருக்கும். இது கொடிய நோய் அன்று. ஏனெனில், கொப்புளம் இருப்பினும் காதுகேட்கும். கிளிசரினில் எப்சம் உப்பைக் கரைத்து அக்கரைசலில் வலைத் துணித் திரியை நனைத்துச் செவிக்குழலில் அத்திரியைக் கொப்புளத் திற்கப்புறம்வரை செலுத்த வேண்டும். தாள்தோறும் அத் திரியை அகற்றிப் புதியதைச் செருகுதல் வேண்டும். இதனால் கொப்புளம் ஆறிவிடும்.

இடைச்செவியில் உண்டாகும் நோய்கள் சீழற்றவை, சீழுடையவை என இரு வகைப்படும். சீழுடையவை ஏற்படின் செவிப்பறை கிழிய நேரிடும்; சீழ்வடியும். வலியும் செவிட்டுத் தன்மையும் உண்டாகும். குணப்படுத்தா திருந்துவிட்டால் மாஸ்ட்டாய்டு எலும்பில் நோய், முகநரம்பு வேலை செய்யாமை போன்ற பல நோய்கள் உண்டாகும். காதொழுக்கு ஏற்பட்டால் மருத்துவரிடம் காட்டி உடனே சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

உட்செவி சம்பந்தமான நோய்கள் சாதாரணமாகக் குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் உண்டாவதில்லை.

காது நோய்களின் முக்கிய அறிகுறிகள் காதில் இரைச்சல் உண்டாவதும், காது கேளாதிருப்பதும், மயக்கம் உண்டாவதும், வலியும் சீழும் உண்டாவதுமாகும். காதின் எப்பகுதியில் நோய் ஏற்பட்டாலும் காது கேளாமை நிகழலாம்; இரைச்சலும் உண்டாகலாம். சீழ் உண்டாவது இடைச்செவியிலேயே. உட்செவி நோய் உண்டானால் மயக்கம் தோன்றும்.

காது வலி ஏற்பட்டால் கவனமாகச் சிகிச்சையை மேற் கொள்ளுதல் வேண்டும். சிறு குழந்தைகட்குப் பல் முளைக்கும் போது காது வலி உண்டாகலாம்; அல்லது குழந்தை ஏதேனும் சிறிய பொருளைக் காதினுள் இட்டு விடலாம். மூக்கிலோ தொண்டையிலோ நலக்குறைவு ஏற்படுவதாலும் காது வலி