பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

கல்வி உளவியல் கோட்பாடுகள்



வைத்துக் கொள்ள வேண்டும். இது தன்-ஒழுங்கினைப்[1] பொறுத்தது.

பொழுதுபோக்கு என்பது அன்றாட வேலையிலிருந்து நம் செயல்களை வேறு வழிகளில் திருப்பி மகிழ்வடைதலாகும். Recreation என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் 'திரும்பவும். உண்டாக்கு’ என்பது பொருள். பொழுதுபோக்கில்தான் மனிதன் வேலையில் செலவிட்ட ஆற்றல்களைத் திரும்பவும் பெற்று வாழ்க்கையைத் துய்க்கும் பேறினைப் பெறுகின்றான். நவீன வாழ்க்கைக்கு நன்முறையில் பொருத்தமுற வேண்டுமாயின், பொழுதுபோக்கும் அன்றாட வாழ்க்கைத் திட்டத்தில் சேர்க்கப்பெறுதல் வேண்டும். பொழுதுபோக்குச் செயல்கள் தாம் மாணாக்கர்களிடம் வருந்திக் கற்பதற்கு வேண்டிய நிலையினை உண்டாக்குகின்றன.

பல்வேறு பொழுதுபோக்குச் செயல்கள் : பொழுதுபோக்குச் செயல்களில் பலவகை உண்டு. சிலவற்றில் தனியாள் பிறருடைய அருஞ்செயல்களை உற்று நோக்குகின்றான்; ஆனால், அதில் அவன் பங்கு கொள்வதில்லை; வேறு சிலவற்றில் தனியாளே பங்கு பெறுகின்றான். இரண்டு வகையிலும் நன்மை உண்டு; ஆனால், நேரில் பங்கு பெறும் செயல்களால் தான் பெரும் பயன் உண்டு. எனவே, தனியாள் கண்டு களிப்பதைவிடப் பங்கு பெற்று மகிழ்வதே சிறந்தது. விளையாடுபவர்கள்தாம் சிறந்த பரிசில்களைப் பெறுகின்றனர். விளையாட்டுகளில் பங்கு பெறுவதனால் பொழுதுபோக்கும் கிடைக்கின்றது; உடற் பயிற்சிகளையும் பெறுகின்றோம். அன்றியும், அவை நம்முடைய ஆற்றல்களை வெளிவிட்டு வளரவும், நம்மிடம் மறைந்து கிடக்கும் திறன்கள் வெளிப்படவும் வாய்ப்புகளை நல்குகின்றன. இன்னும் எத்தனையோ நற்பண்புகள் அமையவும் காரணமாகின்றன. தம்முடைய உள்ளக்கிளர்ச்சியின் துடிப்புகளுக்கு அவை நன்முறையில் போக்குகளாக அமைகின்றன.

வகுப்பினுள் சிறைப்பட்டுக் கிடக்கும் சிறுவர்கள் காலையிலும் மாலையிலும் உள்ள இடை நேரத்தில் வெளியில் வருங்கால் மிகக் குதூகலமாக வருவதை நாம் பார்க்கத்தான் செய்கின்றோம், பள்ளியில் சிறுவர்கள் ஒய்வு நேரத்தில் பொழுதுபோக்காக ஈடுபடுவதற்கு வாய்ப்புகளும் கருவிகளும் இன்றியமையாதவை. உடல் உழைப்பிற்குப் பிறகு மனத்திற்கு வேலையும், மன உழைப்பிற்குப் பிறகு உடலுக்கு வேலையுமாக ஏற்பாடு செய்தல் நலம். பலவிதமான சிறு விளையாட்டுகள்,


  1. 52. தன் ஒழுங்கு-Self-discipline.