பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்பு பிறழ்ந்த நடத்தை

355


இத்தகைய தொடர்ச்சியான தாழ்வுச் சிக்கலையுடைய வர்கள் சமூகம் வெறுக்கும் இருவிதங்களில் செயல் புரிவர். ஒன்று, மேற்செல்லல்; மற்றொன்று பணிதல். குழவிகள் எப்பொழுதும் ஒரே வகையாகச் செயலாற்றா, ஒரு சமயம் மேற்செல்லும்; பிறிதொரு சமயம் பணியும். நெறி பிறழ்தல், பொய், ஆதிக்க நடத்தை, கவனத்தை ஈர்க்கும் தீச்செயல்கள் ஆகியவை மேல் செல்வதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பின் வாங்குதல், செயலாக்கமின்மை, அழுக்காறு, அச்சம், அழுகை, பொய், நோய் ஆகியவை பணிதலுக்கு எடுத்துக்காட்டுகளாம்.

தாழ்வுணர்ச்சியுள்ளவர்கள் எப்பொழுதும் தோல்விகளையே எண்ணிக்கொண்டிருப்பர்; அவர்கள் பிறரையே எதிலும் முக்கிய பங்கினை எடுக்குமாறு விட்டுவிடுவர். ஒரு புதிய செயல்ை மேற்கொள்ளும் பொழுதெல்லாம், அவர்கள் அதிலுள்ள அபாய நிலைகளையும் தொல்லைகளையுமே எடுத்துக்காட்டுவர்; வெற்றியைவிடத் தோல்வியையே அதிகமாக வற்புறுத்திப் பேசுவர். தம்மிடம் குறையொன்றும் இல்லாதிருக்கும்பொழுதே குறையிருப்பதாகக் கருதுவதே இவர்களிடம் அமைந்த கேடு பயக்கும் பண்பு. நிறைமதியுள்ள குழவிகள் தம்மை மந்தநிலை யுள்ளவர்கள் என்றும், உண்மையில் நல் நடத்தையுள்ள குழவிகள்தாம் தீய நடத்தையுள்ளவர்கள் என்றும் எண்ணலாம். தாழ்வுணர்ச்சியின் காரணமாகக் குழந்தைகளிடம் தன்னம்பிக்கைக் குறைவுள்ளமையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி காணும் சாதாரண அநுபவமாகும்.

நெறிபிறழ்வின் சிறப்பியல்புகள்

நெறிபிறழ்ந்த குழந்தைகள்[1]: பொதுவாக இவர்கள் நகர்ப் புறங்களின் 'கெட்டப் பகுதிகளிலேயே காணப்பெறுவர். பழங்காலத்தில் நெறி பிறழ்வு' என்பது அறவழி விட்டு நடக்கும் நடத்தையே என்று கருதப் பெற்றது. நாளடைவில் நெறி பிறழ்வுக்குப் பலவித காரணங்கள் அறியப்பெற்றன. இவை ஆளுமையின, சூழ்நிலையின என இரண்டு பிரிவில் அடங்கும். ஆனால், இவை தனித்தனியாகச் செயற்படுவன அன்று; இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்தவை; ஒன்றையொன்று மாற்றுபவை. மனிதனுக்குப் பாதுகாவல், அன்பு, மதிப்பு போன்ற பல தேவைகள் உள. அவை நிறைவு பெறாவிடில், நிறைவுபெறுவதற்காக வேறு வழிகளை நாடுவான். குடும்பத்திலும் சூழ்நிலைகளிலும் ஏற்படும் குறைகளால் ஆளுமை


  1. 19. நெறிபிறழ்வு-Delinquency.