பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசான்

417


சொல்லுதல் யார்க்கும் எளிய,
அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.[1]

என்ற வள்ளுவப் பெருமானின் பொய்யாமொழியை எண்ணி எண்ணி ஏங்க வேண்டியுள்ளது. இவை மட்டிலுமல்ல; மேலும் பல முரண்பாடுகள் உள்ளன.

பொதுவாகக் கூறினால், நம்முடைய உள்துடிப்புகளும், இயல்பூக்கங்களும் நம்மை இங்குமங்கும் இழுக்கின்றன. ஆனால், நம்முடைய பண்பாடு, பழக்க வழக்கம், வழக்காறு போன்றவை: பல கட்டுப்பாடுகளை உண்டாக்கியுள்ளன. மனநலத்தைப் பாதிக்கக்கூடிய இம் முரண்பாடுகளைப் பலர் மறந்து விடலாம்: ஆசிரியரோ, இத்தடைகளைக் கவனியாமல் இருக்க முடியாது. கல்வி கேள்விகளில் சிறந்தவரென சமூகத்தாரால் கருதப் பெறும் ஆசிரியர் இம் முரண்பாடுகளை உணர்ந்து அவற்றை ஏற்றவாறு குறைக்க முயல வேண்டும்; தகுந்த முன்மாதிரி பாகவும் நடந்து கொள்ள வேண்டும். இது முதிர்ந்தோரான ஆசிரியரின் பெரும் பொறுப்பாகும். சமூகமும் அரசினரும் ஆசிரியரின் தேவைகளை உள்ளபடி உணர்ந்து அவருடைய ஊதியம், நிலை முதலியவற்றை உயர்த்த வேண்டும். பள்ளியில் அவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தருதல் வேண்டும். அண்மைக் காலத்தில் இத்துறைகளில் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. மேற்கூறிய பல முரண்பாடுகளை ஒழிப்பதில் ஆசிரியர் சமூகத்திற்கும் மாணாக்கர்கட்கும் வழிகாட்டியாக இருத்தல் வேண்டும். காலத்திற்கு ஒவ்வாத பழக்கங்களைப் போக்க வேண்டும்; புதியவற்றில் இன்றியமையாதனவற்றைத் தழுவுதல் வேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல; கால வகையி னானே.”

[2]

என்ற நூற்பாவின் உண்மை ஆசிரியத் தொழிலுக்கும் . பொருந்தும். இந்நிலையை மேற்கொண்டால்தான் ஆசிரியர் சமூகத்தோடு நன்முறையில் பொருத்தப்பாடு பெறுதல் முடியும்; அவருடைய பொருத்தப்பாட்டால் பிறர்க்கும். நன்மை பயக்கும்.

ஆசிரியர் - ஒரு தொழில்முறையின் உறுப்பினர்

ஆசிரியத் தொழிலின் உறுப்பினரைப்பற்றி ஆராயப் போவ தற்கு முன் ஒன்றை நினைவில் வைக்கவேண்டும். திருமணம் முடியும்வரை அல்லது வேறு தொழில் கிடைக்கும்வரை இத்-


  1. குறள்-664.
  2. நன்னூல்.நூற்.452. க. உ. கோ.-27