பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உண்மையிலேயே விருப்பம் கொண்டுள்ளார் என்பதையும் நன்கு உணரமுடிகின்றது. ஒருவர் நோக்கத்தை மற்றொருவர் அறிகின்ற வாய்ப்பினால் இருவரிடையேயும் சகிப்புத்தன்மை வளர்கின்றது. இதனால் பல புதிய முறைகளைக் கையாளுவதற்கும் பழைய முறைகளை மாற்றியமைப்பதற்கும் வசதியேற்படுகின்றது. எதனையும் சிந்தனையின்றி மேற்கொள்ளும் மனப்பான்மை இருவரிடையேயும் அடியோடு மறைகின்றது.

குறைகளை வெளிப்படுத்தல்: ஆசிரியரிடமும் ஆட்சியினரிடமும் ஒருவரோடொருவரின் ஒத்துழைப்பும் தன்-மதிப்பும் வளர்ந்தவுடன், ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள குறைகளை மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் துணிவும் ஏற்படுகின்றது. குறைகளை எடுத்துக் காட்டுவதில் உண்டாகும் அச்சம் நாளடைவில் மறைந்துவிடுகின்றது. ஒருவரோடொருவர் நம்பிக்கையாலும் ஒத்துழைத்துச் சமாளிப்பதனாலும் அக்குறைகளை சிறுகச் சிறுகக் களைந்துவிடலாம் என்று இருவருமே உணர்கின்றனர். பெரும்பாலும் ஆசிரியர் குழந்தையிடம் எப்படிப் பழகுகின்றாரோ அப்படியே தலைமையாசிரியரும் ஆசிரியரிடம் பழக வேண்டும். உறவுகொள்ள வேண்டும். தொழில்துறைக் கற்றவில் ஆட்சியினர் ஆசிரியருக்குத் துணை புரிய விழைந்தால் அஃது ஆசிரியரிடம் கலந்து யோசித்த பல செய்திகளை மறைவாகவே [1] வைத்துக்கொள்ளவேண்டும். மேற்கூறியநிலை எய்தப்பெறின் ஆசிரியர் தன் சொந்த மதிப்பையும், மாணாக்கர்களின் வளர்ச்சியில் பொறுப்புள்ள தன் பங்கையும் உணர் கின்றார். கற்பித்தலும் ஆசிரியர் ஒருமைப்பாடமைந்த ஆளுமையைப் பெற உதவும் ஒரு பணியாகத் திகழும்.

ஆசிரியர்-சமூக உறவுகள்: ஆசிரியர் மாணக்கர்களுடனும் ஆட்சியினருடனும் மன ஒன்றலை அமையச் செய்வதுடன் சமூகத்துடனும் நெருங்கிய உறவு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய உறவு முறைகளால் மாணாக்கர்களின் முயற்சிகள் வெற்றியடைவதற்கும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் ஓங்குவதற்கும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். சரியான உறவு முறைகள் அமையாவிடின், ஆசிரியருக்கும் மதிப்பு குறையும்; சமூகத்தாலும் பள்ளிக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படா. தக்க உறவு முறைகள் அமையின் மாணாக்கர்களும் நன்முறையில் கற்பர்; ஆசிரியர்களின் தன் மதிப்பும் உயரும். கீழ்க்கண்ட சாதனங்களால் இத்தகைய உறவு முறைகளை ஏற்படச் செய்யலாம்.


  1. 28. மறைவாக-Confidential