பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

45


என்று மேலே கண்டோம். இவ்வுணர்ச்சிகளே எந்த இயங்கு வாய்கள் செயற்பட வேண்டும் என்றும், அவை எவ்வாறு செயற்பட வேண்டும் என்றும் அறுதியிடுகின்றன. துலங்கல்கள் செம்மையாக அமைய வேண்டுமாயின் தூண்டலுணர்ச்சி இயங்குவாய்களுக்குக் கொண்டுவரப்பெறுதல் வேண்டும். வெளி நரம்பு மண்டலம் துலங்கல் இயற்றுவதற்கு வேண்டிய அலைவுகள் கூடும் பொதுவான இறுதி நரம்புப் பாதையாக அமைந்துள்ளது.

தூண்டலுணர்ச்சிகளும் துடிப்புகளும் எங்கிருந்து வரினும், துலங்கல் நடைபெறுவதற்கு அவை இப் பாதை வழியாகவே தசை நார்களையோ சுரப்பிகளையோ அடைதல் வேண்டும். புறத்தே தாக்கும் தூண்டல்களேயன்றி உடலினுள்ளிருந்தும் தூண்டல்கள் எழுகின்றன. இவற்றுள் சிற்சில துடிப்புகள் ஒன்றையொன்று தாங்கி வலியுறுத்துகின்றன. மற்றும் சில ஒன்றையொன்று தடுத்து நிறுத்துகின்றன. எனவே, மனிதன் இத்தகைய மிகச் சிக்கலான பொருத்தப்பாட்டின் மூலமாக நுணுக்கமும், வேற்றுமைகளும், திட்டமும் பொருந்திய இயக்கத் துலங்கல்களைக் கற்றுக் கொள்கின்றான். பொருத்தப்பாடும் மதிநுட்பமும் அமைந்த நடத்தை அவனிடம் தோன்றுகின்றது. தன்னாட்சி நரம்பு மண்டலம் : மேற்கூறிய நரம்பு மண்டலம் நாம் வெளியுலகத்துடன் தொடர்பு கொண்டு ஆற்றும் செயல் களில் பங்கு பெறுகின்றது. ஆனால், நடத்தை என்பது எப்பொழுதும் வெளிச் சூழ்நிலையை மாற்றுவது மட்டிலும் இல்லை. சில சமயங்களில் நம் உடல் உறுப்புகளுள்ளேயும் மாறுதல்கள் நிகழ்வனவாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, சினம் போன்ற உள்ளக் கிளர்ச்சியால் குருதியோட்டம் அதிகரிக்கின்றது. இந்த நடத்தை உட்புற நடத்தை (implicit) என வழங்கப்பெறும். இம்மாதிரி நடத்தைகளில் செயற் படுவதற்குரிய மண்டலமே தன்னாட்சி நரம்பு மண்டலமாகும். இதிலுள்ள நரம்புகள் முதுகெலும்பின் இருபுறங்களிலும் சங்கிலித் தொடர்போல் சிறிய உருண்டையான நரம்பணுத்திரள்களாக[1] அமைந்துள்ளன. இவ்விரண்டு சங்கிலிகளும் மண்டை யோட்டிலிருந்து முதுகு நரம்பின் அடிப்பாகம் வரையிலும் செல்லுகின்றன.

உயிர் நூற்படி இம் மண்டலம் நரம்பு மண்டலத்தின் மிகப் பழமையான பகுதியாகும். இதில் இரு பகுதிகள் உள. (1) பரிவு நரம்பு மண்டலம்[2]: இதனுடைய நரம்புகள் இதயம்,


  1. நரம்பணுத்திரள்கள்-Nerve ganglia.
  2. பரிவு நரம்பு மண்டலம்-Sympathetic System.