பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

65


இப் புரிமுடியின் உட்புறமானது நெடுக்கே மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளங்குகின்றது. இம் மூன்று குழைகளிலும் பாய்மம் நிரம்பியுள்ளது. இம்மூன்று குழைகளும் அடியிலிருந்து துனிவரையிலும் அந்தப் புரிமுடிபோலவே சுற்றிச் சுற்றி மேற்செல்லுகின்றன. இவற்றிலே ஒரு குழையானது முட்டைப் புழையினின்றும் வருகின்றது; ஆதலின் அதனை முட்டைப்புழைக்குழை எனலாம். மற்றொன்று வட்டப் புழையினின்று வருகின்றது;ஆதலின் அதனை வட்டப்புழைக்குழை எனலாம். புரிமுடியின் துணியில் இவ்விரண்டு குழைகளும் ஒன்றாகக் கலக்கின்றன.மூன்றாவது குழையோ இவ்விரண்டையும்விட மிகமிகச் சிறியது.இதனைப் புரிமுடிக்குழல் என்று வழங்கலாம். இதனது மேற்புறத்தோல் இக்குழலினை முட்டைக்குழையினின்று வேறு பிரிக்கின்றது; இதனது கீழ்ப்புறத்தோல் இதனை வட்டப்புழைக் குழையினின்றும் வேறு பிரிக்கின்றது.

மயிர்க் கருவமைப்பு: இதன் கீழ்ப்புறத்தோலில்தான் கோல் வடிவமான நரம்பமைப்புகளும் மயிர்க்கரு அமைப்புகளும் உள்ளன. இவையே ஒலித்துரண்டலால் தாக்குறுபவை. இவையே செவிப்புலநரம்போடு தொடர்பு பட்டு உள்ளவை. ஒலிஅலை புரிமுடியினுள் செல்லும்பொழுது இவை அவ் அலைக்கேற்ப அசைந்து நரம்புக் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றன. புரி முடியின் அடிப்புறத்திலிருந்து துனிவரை, இம்மயிர்கள் சிறுகச் சிறுக முறையே நீண்டுகொண்டு வருகின்றன. ஒலியால் அசையக் கூடிய தட்டைக் கம்பிகள் பலவற்றைப் பலவகையாக ஓரிடத்தே நிரலே புதைத்து வைத்து, வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புவோமானால், ஒவ்வோர் ஒலி ஒவ்வொரு வகையான கம்பிகளை அசைப்பதைக் காண்போம். அவ்வாறே, வெவ்வேறு ஒலியலைகள் இயங்கும்பொழுது வெவ்வேறு நீளமான அம் மயிர்க் கரு அமைப்புகளும் இயங்குகின்றன. ஒலியலைகளின் உயர்ச்சிக் கேற்றவாறு இம் மயிர்களின் நீளமும் வேறுபட்டு விளங்கு கின்றது. ஆயிரம் நரம்புகள் கொண்ட சிவபெருமான் யாழினை விட 24,000 நரம்புகள் கொண்ட நம் செவியாழ் சிறந்தது அன்றோ? -

ஆசிரியருக்குக் குறிப்பு: கேள்விப்புலனில் குறையுள்ள மாணாக்கர்கள் சாதாரணமாகப் பள்ளிகளில் காணப்படுவர். சில சமயம் ஒரு குறிப்பிட்ட மாணாக்கன் தன் கேள்விப் புலனில் உள்ள சிறுகுறையை உணராமல் இருக்கலாம். அவன் ஒருகால் உணர்ந்தாலும் பல காரணங்களால் அக்குறையை ஆசிரியருக்குத்

க., உ. கோ.3