பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்.3

குழந்தைகளின்
வளர்ச்சியும் துலக்கமும்

குழந்தைகளை நன்முறையில் பயிற்ற வேண்டுமாயின், அவை வளரும் பல்வேறு கோலங்களையும், அவ்வளர்ச்சிக்கு ஆதரவு தரும் முறைகளுள் எந்தெந்த முறைகளில் துணை புரியலாம் என்பதையும் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். பொதுவாக வளர்ச்சிபற்றிய பொது விதிகளை அறிந்து கொண்டால் மட்டிலும் போதாது; ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியையும் தனித்தனியாகவும் கவனித்தல் வேண்டும்.

சாதாரணமாக, நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சியில் செலவாகின்றது என்பதை நாம் அறிதல் நலம். உடல் வளர்ச்சியைப்பற்றிய வரையிலும் இவ்வுண்மையை யாவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் இயக்கம், அறிவு, உள்ளக் கிளர்ச்சி, சமூகப் பண்பு, ஆளுமை போன்றவையும் வளர்கின்றன என்பது அவ்வளவு வெளிப்படையாகப் புலனாவதில்லை யாதலின் அவற்றை எளிதாக அறிந்து கொள்ள இயலுவதில்லை. இவற்றின் வளர்ச்சிப் போக்கு கோலங்களாக அமைகின்றது. அஃதாவது, இவை படிப்படியாகப் பண்பாடடைகின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப் பண்புகள் உள என்பதை ஓரளவு நாம் அறிவோம். இப் பண்புகள்தாம் ஒருவரை விரும்பத்தக்கவராகவும் வெறுக்கத்தக்கவராகவும் செய்கின்றன என்பதையும் அறிவோம். இதை நாம் ஆளுமை[1] எனக் கருதலாம். உண்மை அதுவன்று; ஆளுமை என்பது மிகவும் சிக்கலானது. ஒரு மனிதனுடைய நடத்தை, வழக்கம், மனப் போக்கு, எண்ணங்கள், நோக்கங்கள், கருத்துகள், நம்பிக்-


  1. ஆளுமை-Personaliry.