பக்கம்:கல்வி எனும் கண்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கல்வி எனும் கண்


கோழி விடியலில் எழுந்து தவறாது குரலெழுப்பி ‘வெய்யோனை வாவுபரித்தேரேறி வாவென்றழைப்பனபோல்’ கூவுகின்றன. ஏன்? ஓரறிவுடைய மரங்களும் செடிகளும்கூடக் காலம் தவறாமல் பணியாற்றுகின்றன. மாவும் பலாவும் கோடையில் பழுத்துப் பயன்தருகின்றன: மல்லியும் முல்லையும் இளவேனிலில் முகிழ்த்து மணம் வீசுகின்றன. அவை அனைத்தும் இன்னார் இனியார் என்று பார்ப்பதில்லை; உயர்ந்தார் தாழ்ந்தார் என்று நோக்குவதில்லை. என் கட்சிக்காரன், வென்றவன் என்று வேறுபடுத்துவதில்லை. ஆனால் ஆறறிவுடையவனாகிய மனிதன் எதைக் காலத்தில் செய்கின்றான்? ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் என்ற குறள் ‘பஸ்’சில்-பேருந்துகளில் எழுதுவதற்குத்தானே ஒழிய தன் வாழ்வுக்கு இல்லை என்று தானே செயலாற்றுகின்றான். இந்த நிலையில் அடுத்து வரும் இளம் சமுதாயத்தை-மழலையர் மனத்தை இப்போதே நேரிய வழியில் செலுத்தாவிட்டால் நாடு என்னாகும்? ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இல்லாத சாதிச் சண்டைகளும் சமயச் சண்டைகளும்,(தென் ஆப்பிரிக்காவின் நிறச்சண்டை உட்பட) அவற்றின் வழியே எழும் கொலைகளும் இன்று நாள்தோறும் நம் நாட்டில் நடைபெறுகின்றனவே. மக்கள் கடத்தலும் கள்ளப் பொருள்கள் கடத்தலும் இன்றுபோல் என்றேனும் இருந்ததுண்டா அரசு மட்டுமின்றித் தனிமனிதனும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா! சமயத் தலைவர்கள்-சமூகத் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா! எண்ணிப் பார்த்து இளங் குழந்தைகளுக்கு ஒன்றிய நெறியில், உற்ற கல்வியையும் பிற நலன்களையும் தந்து வருங்கால சமுதாயத்தையாவது வாழவைப்பார்களா?

இந்த இளம் பிள்ளைகளுக்கு வெறும் ஆங்கில மோகத்தை வளர்க்காது, நம்நாட்டுச் சுற்றுச் சூழல், பண்பாடு, வாழ்க்கை இவற்றிற்கு ஏற்ப, பாடல்களையும் பாடங்களையும் கற்றுத்தர ஏற்பாடு செய்யவேண்டும். தமிழ்நாட்டைப்