பக்கம்:கல்வி எனும் கண்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கல்வி எனும் கண்
15
 


வேண்டும் என வரையறுக்கிறார்கள், ‘பி.பி.ஏ.’ போன்ற பாடங்களுக்கு 60% தேவையாகிறது. ஆனால் ஆசிரியர் படிப்புக்கோ ஒன்றும் தேவை இல்லை. பல முறை தோல்வியுற்று நூற்றுக்கு முப்பத்தைந்து நாற்பது வாங்கினால் போதும் என்ற விதி உள்ளது. ‘இது முறையோ! இது தகுமோ! இது தருமந்தானோ?’ என்று வள்ளலாரைப் போன்று வாய் விட்டு அலற வேண்டியுள்ளது.

ஆசிரியர் பயிற்சி சிறுவகுப்புகளுக்கு உரிய ஆசிரியர்களுக்கு (Sec-Grade) இரண்டாண்டுகள் இருக்க, உயர்நிலைப் பள்ளியில் பயிற்றுவோருக்கு ஓராண்டாகக் குறைத்தது ஏனோ எப்படி அந்த எல்லையில் அவர்கள் பயிற்சி பெற முடியும்? அவர்களுக்கு (Practical work) களப்பணியும் செம்மையாக நடைபெறுவதில்லை. ஜூலை கடைசியில் சேர்ந்து, பிப்ரவரி இறுதியில் முடித்து. மார்ச்சில் தேர்வு எழுதி, பட்டம் பெற்றவர் எப்படி முதிர்ந்த அறிவுடைய பவணந்தி காட்டிய ஆசிரியராக முடியும்? அதிலும் இப்போது அஞ்சல் வழிக்கல்வி முறையிலே இப்பயிற்சியைப் பல்கலைக் கழகங்கள் போட்டியிட்டுப் புகுத்தியுள்ளன. எப்படி, களப்பணியும் பாடங்கள் அறியும் நிலையும் அவர்களுக்கு அமையும். ஆகவே எப்படியோ இயந்திர சாலையில் இயந்திரங்களை உற்பத்தி செய்து அனுப்புவது போன்று பல்கலைக்கழகங்கள் பல்லாயிரவரை அனுப்பி நாட்டைப் பாழ்படுத்துகிறது. இயந்திரங்களாவது செம்மையாகச் செயலாற்றும். ஆனால் ஆசிரியர்கள்? இவர்கள் தேர்வினைத் தக்க வகையில் 70% மேற்பட்ட எண் பெற்றவராகத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டு தக்க ஆசிரியரின் கீழ்ப் பயிற்சி பெறச் செய்தால் இவர்களிடம் பயில்வோர் சிறந்து விளங்குவர். இந்த அடிப்படை இல்லை. நாட்டில் கல்வியின் தரம் ‘குறைந்து விட்டது-குறைந்து விட்டது’ என்று மத்திய அமைச்சர்கள்-மாநில முதல்வர்கள் ஆகியோர் கூறுவதில் பயனில்லை. சிகரெட்டு விளம்பரத்தை அழகாக நாளிதழில் விளம்பரப்படுத்தி, அடியில் சிகரெட்டு பிடிப்பது நோயற்ற