பக்கம்:கல்வி எனும் கண்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
கல்வி எனும் கண்
 


நல்லொழுக்கமும் மாணவர் உள்ளத்தில் பதியும்படிச் செய்யின் நன்கு பயன் விளையும். ஒருசிலவாயினும் இவ்வாறு செயல்படுவதால்தான், அத்தகைய கல்வி நிலையங்கள் நாட்டில் வளர்ச்சியுறுகின்றன. மக்களும் பணத்தை வாரி இறைக்கின்றனர். சுடர்விளக்காயினும் நன்றாய் விளக்கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும்' என்பதால், இவையெலாம் செம்மையாக நடைபெறுகின்றனவா எனக் கண்டு, தவறின் நல்லாற்றின் வழி திருப்பி நடத்தும் வகையில் உயர்நிலைக்குழு-நல்ல பண்பாளர் அடங்கிய குழு ஒன்றோ பலவோ நியமிக்கப் பெறல் வேண்டும். அவை வழிகாட்ட நாட்டின் கல்வி நிலையங்கள் நேரிய பாதையில் அடி எடுத்து வைக்குமானால் தமிழகம் பாரத நாட்டில் மட்டுமின்றி உலகிலேயே உயர்ந்து விளங்கும் என்பது உறுதி. விரைந்து செயலாற்ற வேண்டும்.

கால் நூற்றாண்டுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்தது. அப்போதிருந்த சில குறைபாடுகளைப் பற்றிப் ‘பல்கலைக் கழகப் பார்வைக்கு' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வரும் அன்பர் திரு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவர் தம் தென்றல் இதழுக்கு என்னைக் கட்டுரை எழுதச் சொல்லுவார் ஒரு சில வெளியிட்டுள்ளார் என நினைக்கிறேன். இக் கட்டுரையும் அவர் கண்ணில் பட்டு, அவர் இதழிலோ வேறு இதழிலோ வெளிவந்தது, அதை அப்படியே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அன்பர் அன்றைய துணைவேந்தர் திரு. இலட்சுமணசாமி முதலியார் அவர்களிடம் காட்டி விளக்கினாராம்.

உடனே திரு. முதலியார் அவர்கள் என்னை வரச் சொன்னார். காலையில் அவர் வீட்டிற்குச் சென்றேன். என்னை உட்கார வைத்து நான் எழுதியதைப் பற்றிக் கூறி, பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனங்களில்,இத்தகைய தவறுகள் வருவது இயற்கை. அவற்றைச் சுட்டிக் காட்டிய உங்களைப் பாராட்டுகிறேன். இத்தகைய சுட்டிக் காட்டல்கள்