பக்கம்:கல்வி எனும் கண்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
கல்வி எனும் கண்
 


அவனுக்கும் இடம் தர வேண்டிய நிலை கல்லூரிக்கு உண்டாகின்றது. இந்த நிலையில் கல்லூரியின் தரம் எங்கே நாட்டப் பெறும்? மேலும் அதுவரையில் தமிழில் எல்லாப் பாடங்களையும் பயின்ற மாணவர் பலர், ஆங்கிலம் பயிற்சி மொழியாக உள்ள கல்லூரிகளில் இடம் வேண்டுகின்றனர். ஆனால் அரசாங்கமே நடத்தும் ஒருசில கல்லூரிகள் தவிர்த்து, பெரும்பாலான கல்லூரிகள் ஆங்கிலத்தையே பயிற்சி மொழியாகக் கொண்டுள்ளன. அவற்றுள் பணிபுரியும் ஆசிரியர்களுள் சிலர் தமிழ் வாடையே அறியாதவர்கள்; சிலர் தமிழே புரியாதவர்கள். சிலர் தமிழில் சொல்லித்தருவதைத் தாழ்வாக எண்ணுபவர்கள். இந்த நிலையினால் ஆங்கிலமே பயிற்று மொழியாகிறது. அரசாங்கம் இந்த வகையில் கருத்திருத்தி, தம் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளை எல்லாப் பாடங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். தமிழில் பள்ளியில் பயின்றோம் அதே மரபினைத்தான் கல்லூரியில் பின்பற்ற வேண்டும் என மரபு ஏற்படுத்த வேண்டும். இன்றேல் பல மாணவர் மொழியறியாது தடுமாறித் தேர்வுகளில் பொருள் விளங்க மாட்டாது இடர்ப்பட்டு தோல்வியுறுகின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசாங்கம் உடன் தக்க ஆக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

மற்றொன்றும் காணல் வேண்டும். பாடத்தில் ‘10+2+3' என மாற்றிய போது அரசாங்கப் பணி புரிபவர்க்கென்றே (Vocational Course) ஆசிரியப் பயிற்சி முதலியன புகுத்தப் பெற்றன. ஆசிரியப் பயிற்சி தற்போது கைவிடப் பெற்றது. தொழில் கலந்த கல்வி பயின்றவர் அரசாங்க எழுத்தர், தட்டச்சாளர் போன்ற பதவிகளுக்குச் செல்லவென்றே அது அமைக்கப்பெற்றது. ஆனால் தற்போது, அதில் பயின்றவருக்கும் பத்தில் ஒரு பகுதி இடம் தரும் நிலை உண்டாகியுள்ளது. இதை உண்டாக்கியவர் யார் என்று தெரியவில்லை. எனினும் இந்த முறை நீக்கப் பெறல் வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணையம் இத்தகைய மாணவர்களுக்கு