பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

10


திருவனந்தபுரம்‌ பன்னாட்டுத்‌ திராவிட மொழியியல்‌ கழகத்தில்‌ ஆய்வாளராகப்‌ பணியேற்றுத்‌ தமிழகக்‌ கையேடு (THE HAND BOOK OF TAMILNADU) என்னும்‌ விரிவான பெருநூலை எழுதினார்‌. இது சுற்றுலாத்துறைச்‌ செய்திகளடங்கிய நூலன்று; உலக ஆய்வறிஞர்களுக்குத்‌ தமிழகத்தின்‌ ஆய்வுக்‌ களங்களை முழுமையாகச்‌ சுட்டிக்காட்டும்‌ நூலாகும்‌. வ்ரலாறறிந்த தொடக்கம்‌ முதல்‌ சென்ற நூற்றாண்டின்‌ இறுதிவரை வரலாற்றுக்‌ குறிப்புகள்‌, நூல்கள்‌, தலங்கள்‌, சமய சமுதாய நிறுவனங்கள்‌, கலை பண்பாடு ஆகிய அனைத்தும்‌ இந்நூலுள்‌ இனம்‌ காட்டப்பெற்றுள்ளன.

தஞ்சையில்‌ நடந்த உலகத்தமிழ்‌ மாநாட்டில்‌ இந்நூல்‌ வெளியிடப்‌ பெற்றது. இப்பெருமகனாரின்‌ மறைவுக்குப்பின்‌ இந்நூல்‌ வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிய கவிதைகளும்‌ இதழியல்‌ படைப்புகளும்‌

நினைவில்‌ வாழும்‌ தமிழறிஞர்‌ கா. ம. வேங்கடராமையா அவர்கள்‌ மரபுக்‌ கவிதைகள்‌ எழுதுவதிலும்‌ வல்லவராவார்‌. ஸ்ரீ அருணந்தி அடிகள்‌ போற்றித்‌ திருவகவல்‌, ஸ்ரீ காஞ்சி காமகோடி திருமரபுத்தொகை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்‌ கழக ஆட்சியர்‌ சுப்பையா பேரில்‌ வண்ணக ஒத்தாழிசை முதலிய பல மரபுக்‌ கவிதைப்‌ படைப்புகள்‌ செய்தார்‌.

பல்வேறு மலர்களிலும்‌ கலைமகள்‌ உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும்‌ பல கட்டுரைகள்‌ எழுதினார்‌.

தெலுங்கு மொழியில்‌ உள்ள கதைகளை மொழிபெயர்த்து இதழ்களில்‌ வெளியிட்டார்‌.

குமரகுருபரர்‌, ஸ்ரீ குமரகுருபரர்‌ ஆகிய சமய இலக்கியத்‌ திங்களிதழ்களின்‌ ஆசிரியர்‌ குழுவில்‌ இருந்து அப்பதிப்புகள்‌ சிறப்புற வெளிவரப்‌ பெரும்பங்காற்றினார்‌.

தமிழகத்திலும்‌ பல வெளி மாநிலங்களிலும்‌ இலக்கியச்‌ சொற்பொழிவுகள்‌ ஆற்றினார்‌.

இவர்தம்‌ தமிழ்ப்பணிகளின்‌ விரிவை முதுமுனைவர்‌ ம.சா. அறிவுடைநம்பி, முனைவர்‌ சி. இலட்சுமணன்‌ ஆகியோர்‌ தொகுத்த ‘சுவடிப்‌ பதிப்பாசிரியர்கள்‌’ என்ற நூலில்‌ காணலாம்‌.