பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

கல்வெட்டில் கையொப்பம் இட்டவருள், “குடியுடையான் ஆணை நமதென்ற பெருமாள்” என்பவனும் ஒருவனாவன்.12

திருப்பாசுரம்

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே”

இது ஞானசம்பந்தர் புனல்வாதம் செய்தற்கு அருளப் பெற்ற பாடலாகும். கொள்ளிடக்கரையில் கோவிந்தப் புத்தூரில் ஒரு சிவாலயம் உள்ளது. அங்கு மூன்றாம் இராசேந்திர சோழனின் இரண்டாமாண்டுக்குரிய ஒரு கல்வெட்டின் தொடக்கத்தில் மேலே காட்டிய பாடல் சிலா சாசனமாக அமைந்துள்ளது.13

வேந்தனும் ஓங்குக

மேலே காட்டிய திருப்பாசுரத்தில் “வேந்தனும் ஓங்குக” என்று பாடியமையால், கூன் பாண்டியனுடைய கூன் நிமிர்ந்து அவன் நெடுமாறன் ஆயினான். இதனைச் சேக்கிழார்,

“எம்பிரான் சிவனே எல்லாப்
பொருளும் என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன்
தன்னை முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அநபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
தென்னன் கூன் நிமர்ந்த தன்றே”

என்பர்.14