பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

உரைகண்ட வரும் பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள தோத்திரப் பாடல்களைப் பாடியவரும் ஆவார்.

திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, இறையனார் அகப்பொருள் உரைகூறுகிற நக்கீரர் காலத்தையறிய முடியாமலிருப்பது பற்றித் தம்முடைய 'பாண்டிய இராச்சியம்' என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார். இறையனார் அகப்பொருளுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்த நக்கீரனாருடைய உரை, இப்போதுள்ளபடி சங்கச் செய்யுள்களிலிருந்து மேற்கோள் காட்டுவதோடு, கி.பி. 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்பு நடக்காத நிகழ்ச்சிகளையும் மேற்கோள் காட்டுகிறது. இந்த மேற்கோள்களிலிருந்து (இவர் காலத்தைப்பற்றி ) ஒன்றும் அறிய முடியவில்லை " என்று எழுதுகிறார். மேலும் அவர் எழுதுவது வருமாறு: "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சமகாலத்தில் இருந்தவரும் அவனுக்கு வயதில் இளையவருமான நக்கீரரின் காலத்தையறிய இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படுகிற பாண்டிய அரசர் காலத்திலிருந்து பத்துத் தலைமுறையைப் பின்னால் கொண்டு கணிக்கும் முயற்சியும் அவர் காலத்தைத் திருப்திகரமாகக் கூறமுடியவில்லை ."[1]

இவர், நக்கீரனாரின் காலத்தை அறிய முடியாத காரணம் என்ன? இறையனார் அகப்பொருளின் உரைப்பாயிரம் பழைய காலத்து நக்கீரரையும் பிற்காலத்து நக்கீரரையும் ஒருவராக இணைத்துப் பொருத்திக் கூறுகிற தவறு காரணமாகக் காலத்தை அறிய முடியவில்லை . இரண்டு நக்கீரர்களையும் தனித்தனிப் பிரித்து விட்டுக் கவனித்துப்பார்த்தால் காலம் தெளிவாகத் தெரிகிறது. இறையனார் அகப்பொருளுக்கு உரை கண்ட நக்கீரர் கி.பி.5-ம் நூற்றாண்டிலிருந்தவர் என்பதும் சங்ககாலத்து நக்கீரர் அவருக்கு முன்பு பல நூற்றாண்டுக்கு முன்னர் கி.பி. 2-ம் நூற்றாண்டில் இருந்தவர் என்பதும் தெளிவாகத் தெரிகின்றன.


  1. 2. KANilakanta sastri, The Pandian Kingdom