பக்கம்:கள்வர் குகை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

வாயிலில் நின்ற காவலரிடம் ‘அரசரை நம்பி பார்க்க வேண்டும்’ என்று சொல்லுங்கள் ! என்றான். “இப்பொழுது யாரும் பார்க்கமுடியாது. நாளை வா” என்று மறுத்தனர். “என்னுடைய அரசரை நான் விரும்பிய போது பார்க்க முடியாதா?” என்று கேட்டபடி வேகமாக உள்ளே நுழைந்தான் நம்பி. காவலர்கள் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள், அரசனை உடனே பார்க்க வேண்டும் என்றிரிந்த நம்பிக்கு இது பெரிய தடையாகப் பட்டது. அவர்களை உதறித் தள்ளிவிட்டு உள்ளே ஓடினான். அப்பொழுது என்ன சத்தம் என்று கவனிப்பதற்காக ஒரு அறையிலிருந்து எட்டிப் பார்த்த அரசர், நம்பியைப் பார்த்ததும், மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார். “அவசரமாகப் பார்க்க வந்தால். இந்த முட்டாள்கள் தடுத்து விட்டார்கள். சண்டை செய்ய வேண்டி வந்துவிட்டது அரசே” என்று நம்பி தன் வருத்தத்தைக் கூறினான். பாண்டியன் தலையசைத்தவுடன் அந்த வீரர்கள் அகன்று விட்டனர். பிறகு “என்ன அவசர வேலையாக வந்தாய்? உனக்கென்ன வேண்டும்?” என்று அன்போடு கேட்டான் பாண்டியன். நம்பி “எனக்கொன்றும் வேண்டாம். உங்களுக்குத்தான் ஒன்று கொண்டுவந்திருக்கிறேன்” என்று மடி கொண்ட மட்டும் கட்டி வைத்திருந்த, வெள்ளி வைரம் தங்கத்தால் ஆன பொருள்களை எதிரில் கொட்டினான். “நம்பி, இதெல்லாம் ஏது?” என்று அதட்டிய குரலில் கேட்டான் அரசன். “ஓரிடத்தில் திருடிக் கொண்டு வந்தேன். அதைத் தங்களிடம் கொடுக்கவேண்டுமென்று காட்டிலிருந்து அவசரமாகப் புறப்பட்டு வத்தேன் அரசே!” என்றான் நம்பி.