பக்கம்:கள்வர் குகை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

பாண்டியனின் முகம் கறுத்தது. அவன் மனதில் சுழன்ற எண்ணங்கள் நம்பிக்கு எப்படித்தெரியும்? அவையெல்லாம் பாண்டியனுடைய பொருள்கள். அவை எப்படி நம்பி கைக்கு வந்தன என்று அவன் தெரிந்து கொள்ள நினைக்கவில்லை, ஆனால், மிகத்திறமையாக நம்பியே அவற்றைத் திருடிவிட்டுத் தன் திறமையை அரசனிடமே எடுத்துக்காட்ட நினைத்து விட்டான் என்று தான் பாண்டியன் நினைத்துக் கொண்டான். இப்படி நினைத்தவுடன் அவன் கண்கள் சிவந்து சுழன்றன. அங்கிருந்த மணியை ஓங்கியடித்தான். அந்தப் பழைய காவவர் இருவரும் வந்தார்கள். “நம்பி? நீ தீயோடு விளையாடுகிறாய். உனக்கு இது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் தீ சுட மறந்துவிடாது” என்று சொல்லிவிட்டுக் “காவலர்களே, நம்பியைச் சிறையில் வையுங்கள்” என்றான். நம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. “அரசே எதற்காக என்னைச் சிறையில் வைக்கிறீர்கள்?” என்று கேட்டான். “எல்லாம் நாளைக்குப் புரியும்” என்று கூறி விட்டுப் பாண்டியன் போய்விட்டான்.

பாண்டியன் வேடர் தலைவனுக்குச் செய்தி அனுப்பினான், அவன் வந்து சிறையுள்ளே ஆத்திரத்தோடு ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்த நம்பியைப் பார்த்தான். “டே! நம்பி, அரசர் கோபப்படும்படி ஏன் நடந்துகொண்டாய்?” என்று கேட்டான். நம்பி நடந்த விஷயத்தை எல்லாம் வரிசையாகச் சொன்னான். உடனே வேடர் தலைவன் பாண்டியனிடம் போய்க் காட்டில் குகையிருப்பதைப் பற்றிக் கூறினான்.