பக்கம்:கழுமலப்போர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

களில் சிறு முகவைகளைக் கட்டி இட்டு முகந்து ஆனிரை களுக்கு ஊட்டுவர்.[1]

ஆனிரை வளர்க்கும் அருந்தொழில் மேற்கொண்டு வாழ்ந்த கொங்கர், சிறந்த கொற்றம் உடையவராயும் விளங்கினர். சிறந்த வாட்போர் வீரராய் வாழ்ந்தனர். அரிய பெரிய கோட்டைகளையும் அழிக்கவல்ல பெரிய பெரிய குண்டுக் கற்களை வீசவல்ல கல்கால் கவணை என்ற கருவிகளையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். கொங்கரின் இப்போர்ப்பண்பு, “ஒளிறுவாள் கொங்கர்”, “ஆர் எயில் அலைத்த கல்கால் கவணை நார் அரி நறவின் கொங்கர்” எனப் புலவர்களால் பாராட்டப்பெற்றுள்ளன.

இவ்வாறு ஆனிரை ஓம்பும் தொழில் மேற்கொண்டு ஆற்றல்மிக்க மறவராய் வாழ்ந்த கொங்கர், அவ்வப்போது, தம் அண்டை நாடுகளாய சேர, சோழ, பாண்டிய நாடுகளுள் புகுந்து, அந்நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிவந்து, தம் ஆனிரைச் செல்வத்தை வளர்த்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். அதனால், அச் சேர, சோழ, பாண்டியர் மூவருமே கொங்கரைத் தம் பகைக்குலத்தவராகக் கொண்டு, அவரை அழித்து ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற சேர மன்னன், அவரை வென்று, அவர் நாட்டைத் தன் நாட் டோடு இணைத்துக்கொண்டான்.[2] கிள்ளி வளவன் என்ற சோழர்குலப் பேரரசன், கொங்கரை வென்று புகழ்


  1. “பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச்
    சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்
    கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
    ஆகெழு கொங்கர் நாடு.” —பதிற்றுப் பத்து : 22

  2. “ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த
    வேல்கெழுதானை வெருவரு தோன்றல்!”

    —பதிற்றுப் பத்து : 32
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/47&oldid=1359856" இலிருந்து மீள்விக்கப்பட்டது