பக்கம்:கழுமலப்போர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

அவரை அழிக்க வேண்டுமாயின், அதற்குத் தன் களிற்றுப் படையின் துணை வேண்டும் எனக் கருதினான் பகை வேந்தன். களிற்றுப் படை களம் புகுந்தது. பாய்ந்து வரும் போர் மறவர்களைத் தாக்கி அழித்தது. பலர் உயிரிழந்து வீழ்ந்தனர். ஆனால், வீழ்ந்த வீரர்கள் வாளா இறந்தாரல்லர். தம்மைத் தாக்கி அழித்த அக்களிறுகளில் சிலவற்றை அவர்களும் கொன்று அழித்தனர். இப்போரின் விளைவால், களம் இரத்தக் காடாயிற்று, செந்நீர் வெள்ளம்போல் பாய்ந்தோடிற்று, வீரர் வாள் பட்டு உயிரிழந்த களிறுகளில் ஒரு களிறு, தோல் இழந்து உருண்டு கிடக்கும் முரசுமீது வீழ்ந்தது. களத்தின் குறுக்கே ஓடிய குருதி வெள்ளம், யானைகள் வீழ்ந்தமையால் ஓடமாட்டாது தடையுற்றது. அவ்வாறு தடையுற்றுத் தேங்கிய குருதி வெள்ளம், இறுதியில், யானையின் உடற்கீழ் அகப்பட்டுக் கிடக்கும் முரசின் ஊடே நுழைந்து பாய்ந்தோடிற்று.

கார் காலத்தில் பெய்யும் மழை நீரைத் தேக்கி வைத்துக் கோடைக் காலத்தில் பயன் கொள்ளும் குளங்கள் பல ஆங்காங்குள, ஆங்குக் கார்காலத்துப் புதுமழை பெய்யப் பெருகிப் பாயும். பெருவெள்ளம், மண்ணின் செந்நிறம் ஏற்றுக் குருதிபோல் சிவந்து ஓடி, மலைபோல் உயர்ந்த கரைகளுக்கு அடியில் அமைத்திருக்கும் மதகுகளின் ஊடே புகுந்து, குளத்தில் நிறையும் காட்சியைக்கண்டு களித்தோர் பலராவர். அக்காட்சியைக் கண்டு களித்த கண்களால், குளத்து மதகின் வழியே பாய்ந்தோடும் செம்மண் வெள்ளம் போல், யானையின் உடலுக்கடியில் அகப்பட்ட இரு தலையும் தோல் கிழிந்து போன முரசின் வழியே, இறந்து வீழ்ந்த வீரர்களின் இரத்த ஆறு பாய்வதைக் காண, நேர்வார், கண்கள் நீர் மல்கக் கலங்குவர் அல்லரோ?

“ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம்சேர் யானைக்கீழ்ப்
போர்ப்பு இல் இடிமுரசின் ஊடுபோம் ஒண்குருதி
கார்ப்பெயல் பெய்தபின் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு நீர் உமிழ்வ போன்ற, புனல்நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து.” —களவழி: 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/57&oldid=1359985" இலிருந்து மீள்விக்கப்பட்டது