பக்கம்:கழுமலப்போர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

வேழங்கள், தம் அழித்தல் தொழிலை மறந்துவிடும் என உணர்ந்தனர். உடனே, ஆற்றல் கொண்ட மட்டும் தம் தோள்களை ஓச்சி, கை வேலைக் களிறுகளின் நுதலிற் குறி வைத்து வீசி எறிந்தனர். எதிர்பார்த்தவாறே, வேல்களும் விரைத்து சென்று வேழங்களின் நுதலில் ஆழப்பதிந்தன. அரசிலை போலும் முனையும் அடித்தண்டின் ஒரு பகுதியும் உள்ளே அழுந்திக்கொள்ளக் காம்பின் கடைப் பகுதி மட்டும் இருகோடுகளுக்கிடையே வெளிப்பட்டு நின்றது. இருகோடுகளுக்கிடையே வேலேறுண்ட அவ்வேழங்கள் முக்கோட்ட வேழங்கள் போல் தோன்றிக் காண்பவர் அகத்தில் அழுகையும் நகையும் ஒருங்கே தோன்றுவித்தன.

“இடை மருப்பின் விட்டெ றிந்த எஃகம்கால் மூழ்கிக்
கடைமணி காண்வரத் தோற்றி—நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லாம், நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து.” களவழி: 19

நிலம் உழும் யானை :

கழுமலக் கோட்டையைத் தகர்த்து, அதைக் காத்து நிற்கும் கொங்கு நாட்டுப் படைத் தலைவர்களைக் கொன்று அவர் வேழப் படையை வீறிழக்கப் பண்ணிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறை செய்துகொண்டு போதல் வேண்டும் என்ற வேட்கை, சோழன் செங்கணான் உள்ளத்தில் வேரூன்றி வளர்ந்துவிட்டது. அதனால் அதை நிறைவேற்றிக் கொள்ளத் தன் படைபலம் முழுவதையும் பயன் கொள்ளத் துணிந்தான். வாட் படை, விற்படை, வேற்படை முதலாம் பல்வகைப் படைகளும் போர்க்களம் புகுந்தன. படை மறவர்க்கு ஊக்கம் அளிக்க, போர்ப்பறை ஓயாது ஒலித்துக்கொண்டேயிருந்தது. மாரிக்காலத்து மழைத் தாரைகளென, அம்புகள் வில்லினின்றும் வரிசை வரிசையாக வெளிப்பட்டுக் களமெங்கும் விரைந்து மொய்த்தன. வேற்படை பலவும் ஒன்றுகூடி நின்று உரம் கொண்டு போரிட்டன. களம் குருதிக் காடாய்க் காட்சி அளித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/59&oldid=1360005" இலிருந்து மீள்விக்கப்பட்டது