பக்கம்:கழுமலப்போர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

முடித்தார் புலவர். அரசன் இன்பத்தின் எல்லையைக் கண்டு விட்டான். தன் நாடு நலம் அனைத்தும் அந்நாற்பது பாக்களில் ஒரு பாவிற்கே ஈடாகாது என உணர்ந்தான். அத் தகைய பாக்கள் நாற்பது பாடிய புலவர்க்கு எதையும் அளிக்கலாம், எவ்வளவு வேண்டுமாயினும் அளிக்கலாம் என்றது அவன் உள்ளம்.

அரசனின் அவ்வுள்ள உணர்வை உணர்ந்து கொண்டார் புலவர். இருக்கை விட்டு மெல்ல எழுந்தார். அரசனை அன்போடு விளித்தார். தம் இரு கைகளையும் விரித்து நீட்டி, “வேந்தே! என் உள்ளம் விரும்பும் ஒருபொருளை வேண்டிப் பெறவே உன்பால் வந்தேன். உன்னால் கொடுக்கக் கூடியதே அப்பொருள், அதை அளிக்கும் அருள் உள்ளம் உனக்கு உண்டாதல் வேண்டும்” என்று தன் மன வேட்கையை மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கினார். புலவர் கேளா முன்பே, அவர் விரும்புவது எல்லாம் கொடுக்கத் துடிக்கும் உள்ள முடையனாகிய அவன் அவர் வாய் திறந்து கேட்பதை மறுப்பனே? அவர் வேண்டுகோள் அவன் காதில் வீழ்ந்ததோ இல்லையோ, “பெருந்தகையீர்! தாங்கள் என்பால் பெற வேண்டுவது எதுவேயாயினும் மனம் உவந்து தருவேன்; தயங்காது கேளுங்கள்” என்று தன் இசைவினை அளித்தான். உடனே புலவர், “அரசே! கழுமலப் போரில் உன்னால் சிறை செய்யப்பெற்ற காவலன், கணைக்கால் இரும்பொறை, என் நண்பன்; என்னைப் பல்லாண்டு புரந்தப் பெரிய வள்ளல். மானம் முதலாம் மாண்பு நிறை குணங்கள் உடையான். அத்தகையான் சிறையுண்டிருப்பது காண என் சிந்தை நைந்து உருகுகிறது. அவன் விடுதலையில் என் உயிர் வாழ்வு தங்கியுள்ளது. இதுவே உன்பால் வேண்டுவது” என்று கூறினார்.

புலவர், தம் வறுமை தீரப் பொன் கேட்பார், பொருள் கேட்பார், நாலுகாணி நிலம் கேட்பார்; நாட்டு வருவாயில் பங்கு கேட்பார் என எதிர்நோக்கிய செங்கணான், அவர் தம் நலத்தை நாடாது, தம் நண்பன் நல்வாழ்வு குறித்து வேண்டுவது கண்டான். அவர் புலமையின் பெருமை கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/88&oldid=1360661" இலிருந்து மீள்விக்கப்பட்டது