பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கவிக்குயில் சரோஜினியின்



8. "பதக்கம் பெறச் சுதந்திரத்தை அடகு வைக்க மாட்டேன்"

கவிக்குயில் சரோஜினி தேவி இந்தியா முழுவதுமாகச் சுற்றிச் சுற்றிச் சுயராஜ்ஜியம் பெறவேண்டும் என்பதற்காக, சுய ஆட்சிக்கட்சி நடத்தியக் கூட்டங்களிலும், மற்ற பிற கூட்டங்களிலும் சூறாவளிச் சுற்றுப்பயணம் பிரச்சாரம் செய்தார்:

ஓய்வு ஒழிவின்றி, கவிதைகள் எழுதக்கூட நேரமின்றி, தனிமையாகவும், விடுதலைப் போராட்டத் தலைவர்களோடும் சுயாட்சிக் கட்சி சார்பாகவும் கிராமம் கிராமமாகச் சென்று பேசியதால் அவரது உடல் நலம் சீர் குலைந்தது; நோயுற்றார்; லண்டன் பயணம் சென்று சிகிச்சைப் பெற்று, அங்கே சில மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு கவிக்குயில் நண்பர்கள் கூறியதற்கேற்ப லண்டன் மாநகர் சென்றார்.

முதல் உலகப்போர் 1914-1918-ம் ஆண்டு நடந்து முடிவுற்றது. கோபாலகிருஷ்ண கோகலே ஆங்கிலேயர்களையும், அவர்களது அரசையும் எதிர்க்காமல் அனுசரித்து போனவாறு, காந்தியடிகளும் அவரைப் பின்பற்று நடந்தார்!

உலகப்போரில் இங்கிலாந்து நாடும், பிரிட்டிஷ் ஆட்சியும் சிக்கித் தவிக்கும்போது, அதற்கு உதவி செய்வதுதான் மனிதாபிமானம் என்று காந்தியடிகள் நினைத்தார்!

அதற்கு ஏற்றவாறு பிரிட்டிஷ் போர்ப்படைக்குக் காந்தியடிகளே முன்னின்று ஆட்களைச் சேர்த்துக் கொடுத்தார்! கடுமையாகக் காந்தியார் அலைந்ததால் அவரது உடல் நலமும் நலிந்து, நோயுற்றார்!