பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கவிக்குயில் சரோஜினியின்

கவியரசி சரோஜினிதேவி வெளிநாடுகளுக்குச் செல்வது என்பது புதிய அனுபவம் அன்று. அவர் உலகம் முழுவதும் பலமுறை சென்று திரும்பியவர். இந்தியத் தலைவர்களிலேயே வெளிநாடுகளுக்கு பலதடவை சென்று அனுபவப்பட்டவர் சரோஜினிதேவியே.

இந்தியாவிற்கு வெளியே மட்டுமன்று; இந்திய மாகாணங்கள் எல்லாவற்றுக்கும் ஊர் ஊராக, நகரம் நகரமாகச் சென்று காங்கிரஸ் மகாசபைப் பற்றியக் கருத்துக்களை விளக்கமாக எடுத்தக்கூறிய ஆற்றல் பெற்றவர். அதனாலும் அவரைக் காந்தியடிகள் அமெரிக்கா செல்லுமாறு கூறினார்.

எனவே, கவியரசி சரோஜினிதேவி காந்தியடிகளுடைய அன்புக் கட்டளையை ஏற்று அமெரிக்கா சென்றார். அங்கே சென்ற கவிகுயிலுக்கு அமெரிக்கா அமோக வரவேற்பை அளித்து மகிழ்வித்தது.

அமெரிக்காவில் சரோஜினிதேவி அங்குள்ள ராஜ தந்திரிகளைச் சந்தித்தார்; அறிஞர்களோடு அளவளாவினார்; அரசு அதிகாரிகளைப் பார்த்தார்; பொதுக்கூட்டங்கள் பலவற்றில் அமெரிக்க மக்களிடையே பேசினார்.

அவர் எந்தெந்த கூட்டங்களில் பேசினாரோ, அந்தந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கினார்.

அமெரிக்க அரசுக்கும், அறிஞர்களுக்கும், ராஜதந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவில் பிரிட்டிஷ் செய்து வரும் கொடுங்கோன்மை ஆர்ப்பாட்டங்களை அம்பலப்படுத்தினார். இந்தியாவின் உண்மை நிலைகளை விவரமாக எடுத்து விளக்கினார்.

இந்திய மக்களின் உரிமைப் போராட்டமான விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும், காந்தியடிகளாருடைய அகிம்சை நெறிகள், சத்தியாக்கிரகப் போராட்டத்தன்மைகள், காந்தியத் தத்துவங்கள் அனைத்தையும் அருமையாக