பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. தொட்டிழுத்து முத்தமிட்டான்!...

தட்டாமல் பாடி, உங்கள் காதல் நெஞ்சங்களைத் தட்டிவிட்ட அந்தக் காதலர்களின் காதற் பாக்களை நீங்கள் மகிழ்வு காட்டி, மகிழ்வு கூட்டி அனுபவித்த பான்மையினை நான் வெகுவாக அனுபவித்தேன். இத்தகைய அனுபவங்கள் எல்லோருக்குமே வாய்த்துவிடாது; வாய்ப்புக்களின் முல்லை நகைப்பில் மனித மனங்கள் மலர்ச்சியுறும் பொழுதில்தான், அனுபவங்கள் மெருகு பெறுகின்றன. அப்படிப் பட்ட மெருகேற்றத்தில்தான், காதல் எனும் தமிழ் இலக்கிய மரபும் முத்திரை பெறத் தொடங்குகிறது.

கவிஞன் ஒன்றைத்தான் பாடுகிறான். ஆனால் அவன் பாடும் பாட்டின் பாவனையில், ஒரு கருத்தில் பல கருத்துக்கள் உள்ளடக்கம் பெற்றதாக அமைந்துவிடும். ஆகவேதான், அது நம்மையும் நமது மனத்தையும் அகத்தும், புறத்தும் குளிர்விக்க முடிகிறது!—பிராட்லே ( A. C Bradley ), யின் தெளிந்த கருத்து எனக்குப் பிடித்தது.

காதல், ஒரு விளையாட்டு. இதற்கும் வழக்கம் போல் இரு கட்சிகள் தாம் உண்டு. இரண்டு கட்சிக்கும். இரண்டு பேர்தான் ஆட்டக்காரர்கள். ஒன்றிற்குத் தலைவனும் மற்றதற்குத் தலைவியுமே விளையாடும் நபர்களாக இயக்கம் பெறுகின்றனர்.

40