பக்கம்:கவிஞர் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் காத்த கோவூர்கிழார்

29



குழந்தைகள் இரண்டும் அழுதுகொண்டிருந்தன. அப்போதுதான் யானையையும் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதைப் பார்த்த குழந்தைகள், சிறிது நேரம் அழுகையை நிறுத்தி, வேடிக்கை பார்த்தன. தம்மைக் கொல்ல வந்த யானை என்று தெரிந்து கொள்ளாமல் குழந்தைகள் அழுகையை நிறுத்திப் பார்க்கிறார்கள் என்பதைக் கவனித்த கோவூர்கிழாருக்கு அழுகை வந்தது. அவர் தம் கண்ணைத் துடைத்துக் கொண்டார். குழந்தைகளிடம் போனார். அருகில் அவர்களுக்குக் காவலாக நின்றுகொண்டிருந்த அதிகாரியைப் பார்த்தார். “உங்கள் வேலையைச் சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். நான் மன்னனிடம் சென்று, மீண்டும் வந்து சொல்கிறேன்” என்றார்.

புலவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும் தமிழ் நாட்டில் பிறந்தவன் அல்லவா அந்த அதிகாரி? கோவூர்கிழார், முடியுடை மன்னர் போற்றும் பெருமையை உடையவர் என்பதை அவன் அறிவான். அவன் ஒப்புக்கொண்டான்.

உடனே புலவர், கிள்ளிவளவனை நோக்கிச் சென்றார். அவன், தன் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்றுகொண்டிருந்தான். கோவூர்கிழார் வேகமாகச் சென்று, அவன்முன் நின்றார். வந்த வேகத்தினால் அவர் பெருமூச்சு விட்டபடியே நின்றார்.

அவரைக் கண்டவுடன், கிள்ளிவளவன் எழுந்து வரவேற்றான். “மிக விரைவாக மூச்சு வாங்கும்படி வந்திருக்கிறீர்களே! சொல்லி அனுப்பவில்லையே! உட்காருங்கள்” என்றான்.

“மூச்சு வாங்கும்படி நீ தான் செய்தாய். எனக்கு உட்கார நேரம் இல்லை. உன்னிடம் சில செய்திகளைச் சொல்ல வந்தேன்.”

“என்ன அவசரமான காரியம்?”

“ஆம்; தலைபோகிற காரியம் இது. சொல்லட்டுமா?”

“சொல்லுங்கள்” என்றான் அரசன்.

“இளங் குழந்தைகள் இருவரை நீ கொலை புரியுப் போவதாக நான் கேள்வியுற்றேன். அது நியாயமா என்று கேட்கத்தான் வந்திருக்கிறேன்” என்று படபடப்புடன் கூறினார் புலவர்.

“அவர்கள் இருவரும் மலையமான் பிள்ளைகள். அரசர்களையெல்லாம் நடுங்கச் செய்த கொடியவனுடைய பிள்ளைகள் பெரியவர்களாகி அவனைப் போலவே கொடுமை புரிவார்கள். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/31&oldid=1525755" இலிருந்து மீள்விக்கப்பட்டது