பக்கம்:கவிஞர் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழனைக் காத்த மோசியார்

யானை வெகு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வீரர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள். கையில் வாளை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடிவந்தார்கள். ஒரே ஆரவாரம். யானையின்மேலே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவனைப் பார்த்தால் யானைப் பாகன் என்று நன்றாகத் தெரிந்தது. அவன்தான் முன்னால் உட்கார்ந்திருந்தான். பின்னால் இருந்தவன் ஒளிவீசும் முகமும் ஆடையணிகளும் அணிந்திருந்தான். அவன் அரசனாகத்தான் இருக்க வேண்டும். யானைப்பாகன் அங்குசத்தால் யானையின் மத்தகத்தில் குத்தினான். அது அடங்கவில்லை. பிளிறிக்கொண்டே ஓடியது. பின்னால் ஓடிவந்த வீரர்கள் அந்த யானையைத் துரத்திக்கொண்டு வந்தார்கள் என்றே தோன்றியது. அவர்கள் எதற்காக அதைத் துரத்த வேண்டும்? யானையின்மேல் இருந்தவர்கள் யார்? துரத்துகிறவர்களுக்கு விரோதிகளா?

பார்க்கிறவர்கள் எல்லோருக்கும் இந்தச் சந்தேகங்கள் உண்டாயினவோ என்னவோ தெரியாது. நெடுந்தூரத்தில் வரும் யானையையும் வாள் பிடித்தவர்களுடைய கூட்டத்தையும் கண்டு, சேர அரசன் பலவகையான சந்தேகங்களைக் கொண்டான்.

திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக இன்று உறையூர் இருக்கிறது. பழங்காலத்தில் அதுதான் பெரிய நகரமாகவும் திருச்சிராப்பள்ளி அதன் பகுதியாகவும் இருந்தன. சோழ அரசர்களின் தலைநகரம் உறையூர். முதல் முதலில் கரிகாலன் என்ற சோழச் சக்கரவர்த்தி உறையூரைப் பெரிய நகரமாக்கி அங்கே இருந்து செங்கோல் செலுத்தி வந்தான். பிறகு அதுவே சோழ இராசதானி நகரமாக விளங்கியது. அங்கே இந்தக் கதை நடந்த காலத்தில் கோப்பெருநற்கிள்ளி என்ற சோழன் அரசாண்டு வந்தான்.

அவன் காலத்தில் இருந்த சேரன், அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன். அவன் தன் வீரத்தால் சேர நாட்டை விரிவாக்கினான். மலையாளம், கொச்சி, திருவாங்கூர் என்று வழங்கும் கேரள ராஜ்யந்தான் சேர நாடு. அதன் தலைநகரம் வஞ்சி. அந்துவன், தன் படைப்பலங் கொண்டு மலைநாட்டுக்கு மேற்கே உள்ள கொங்கு நாட்டையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான். கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையில் கருவூர் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/34&oldid=1525771" இலிருந்து மீள்விக்கப்பட்டது