பக்கம்:கவிஞர் கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கவிஞர் கதை



கோப்பெருநற்கிள்ளி என்னும் சோழன், வழக்கம்போல் அன்று பட்டத்து யானையின்மேல் ஏறி, ஊர்வலம் வந்தான். திடீரென்று யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அது வேகமாக மேற்குத் திசையில் ஓடத் தொடங்கியது. யானையின்மேல் பாகனும் சோழனும் அமர்ந்திருந்தார்கள். யானை, கட்டுக்கு அடங்காமல் ஓடுவதைக் கண்டு, உடன் இருந்த வீரர்கள் ஆயுதமும் கையுமாக அதைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். ஒடி இளைத்துப் போனார்கள். ஆயினும் அங்கங்கே இருந்த மக்கள், வாளோடும் வேலோடும் துரத்தி வந்தார்கள். யானை, சோழ நாட்டு எல்லையையே கடந்து வந்துவிட்டது. சேர நாட்டைச் சார்ந்திருந்த கருவூர் எல்லைக்குள் புகுந்தது. அப்போதுதான் சேர அரசன் பார்த்தான்.

உறையூர்க்காரராகிய புலவர் முடமோசியாருக்கு யானையின் மேல் இருப்பவன் சோழன் என்று தெரிந்துவிட்டது. யானையின் நிலையைக் கண்டு, அது மதம் பிடித்து ஓடி வருகிறது என்பதையும் உணர்ந்துகொண்டார்.

சேரனும் சோழனும் நண்பர்களாகப் பழகாத காலம் அது. வேற்று அரசன் அழைப்பு இன்றியும் காரணம் இன்றியும் அயல் நாட்டில் புகுவது முறையன்று. சோழனோ வாள்வீரர்களோடு வருகிறான். அந்த நிலையில் நிச்சயமாகச் சேர மன்னன் அவனைக் கைப்பற்றிச் சிறையில் அடைத்துவிடுவான். அப்படிச் செய்வது அரசியலின்படி தவறான காரியம் அல்ல.

முடமோசியார் சோழனைக் காப்பாற்ற வேண்டும் என்று நிச்சயம் செய்துகொண்டார். சேரன், “இவன் யாரோ?” என்று கேட்ட போது மோசியார் விடை கூறவில்லை. யானையையும் அதன்மேல் இருந்தவனையும் உற்றுப் பார்த்தார். மறுபடியும் சேரன், “யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டான்.

“பாவம்! தர்ம சங்கடமான நிலையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறான் இவன் புலித்தோலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/36&oldid=1525776" இலிருந்து மீள்விக்கப்பட்டது