பக்கம்:கவிஞர் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிசிர் ஆந்தையார்

பிசிர் ஆந்தையார் என்ற பெயரைக் கேட்டாலே வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? பிசிர் என்பது ஒர் ஊர்; பாண்டி நாட்டில் உள்ளது. ஆந்தையார் அந்த ஊரில் இருந்த புலவர். நன்றாகப் படித்தவர்; அருமையான கவிஞர்; மிகவும் தங்கமான குணம் உடையவர். அவர் எவ்வளவு நல்லவரோ அவ்வளவு நல்லவர்கள் அவர் வீட்டில் இருக்கிற எல்லோரும்.

அப்போது மதுரையில் ஒரு பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு அறிவுடை நம்பி என்று பேர். அரண்மனைச் செலவு அதிகம் ஆகிவிட்டது என்று அவன் வரி அதிகமாகப் போட்டுவிட்டான், அதனால் மக்களுக்குத் துன்பம் உண்டாயிற்று. அரசனிடம் போய்த் தங்கள் கஷ்டத்தைச் சொன்னால் கேட்பானோ கேட்கமாட்டானோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. பயப்பட்டால் நடக்குமா? வரிப் பாரம் அவர்களை அழுத்தியது. அரசர்கள் எவ்வளவுதான் அதிகாரம் உடையவர்கள் ஆனாலும், புலவர்களுடைய அறிவுக்கு மதிப்புப் கொடுத்து அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். புவியரசரைவிடக் கவியரசருக்கு அந்தக் காலத்தில் மதிப்பு அதிகம்.

பிசிர் ஆந்தையாரிடம் போய்க் குடிமக்கள் தங்களுடைய குறையைச் சொல்லிக்கொண்டார்கள். அவர், "நான் அரசனைப் பார்த்து என்னால் இயன்றதைச் செய்கிறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பினார். பிறகு மதுரைக்கு வந்து பாண்டியன் அறிவுடை நம்பியை நாடிச் சென்றார்.

அவரைக் கண்டவுடன் பாண்டிய மன்னன் வரவேற்று உபசாரங்கள் செய்தான். உயர்ந்த இடத்தில் அமரச் செய்து பேசிக்கொண் டிருந்தான். பேச்சுக்கு நடுவிலே கவிஞர், மெல்ல யானையைப்பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக்கொண்டார்.

"ஒருவன் யானை ஒன்றை வைத்திருந்தான். அவனுக்குச் சின்ன வயல் ஒன்றும் இருந்தது. அந்த வயல் விளைந்து வந்ததும் நெல்லைச் சேமித்து வைத்தான். தான் சோறு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் யானைக்குக் கவளம் கொடுப்பதை மறக்க மாட்டான். அந்த வயலில் விளைந்த நெல், யானைக்கும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/6&oldid=1525680" இலிருந்து மீள்விக்கப்பட்டது