பிசிர் ஆந்தையார்
5
குடும்பத்துக்கும் போதுமானதாக இருந்தது. ஒரு நாள் அந்த வயலுக்கு ஆபத்து வந்துவிட்டது.”
“என்ன ஆபத்து?" என்று பாண்டியன் கேட்டான்.
“யானையினாலே வந்த ஆபத்து.”
“பழகின யானைதானே?”
“ஆமாம், பழகின யானைதான். அதற்கு என்னவோ ஒரு நாள் உற்சாகம் உண்டாகிவிட்டது. வயலில் விளையும் நெல்லை அறுத்து வந்து, சோறாக்கி, ஆண்டு முழுதும் கொடுத்து வந்தது பிடிக்கவில்லைபோல் இருக்கிறது! நேரே வயலிலே புகுந்து விட்டது.”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன?”
“ஒரே குழப்பந்தான். வயல் முழுவதையும் அழித்துவிட்டது. அதுவாவது வயலில் இருந்த பயிர் முழுவதையும் தின்றதா? இல்லை, இல்லை. அதன் வாய்க்குள் போனதைவிடக் காலால் துகைபட்டு அழிந்தது அதிகம்.”
“அந்த யானைக்காரன் என்ன ஆனான்?”
“அதை மறுநாளே விற்றிருப்பான். அவனைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யானையாவது விலங்கினம். அறிவுடையவர்கள் அந்த யானையைப்போல் நடந்துகொண்டால் எவ்வளவு துன்பம் உண்டாகும் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.”
“நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே' என்று கேட்டான் அரசன்.
“அரசர்கள் யானைக்குச் சமானமானவர்கள். குடிமக்கள் வயலைப் போன்றவர்கள். அளவு தெரிந்து வரி வாங்கினால் குடி மக்களுக்கும் நல்லது; அரசர்களுக்கும் நல்லது. அளவுக்கு மிஞ்சிக் குடிகளிடம் வரி தண்டுவதாக இருந்தால், யானை புகுந்த வயல் போலத்தான் காடு ஆகிவிடும்.”
அவர் இதைச் சொன்னபோது அரசனுக்குச் சொரேர் என்றது. கவிஞர் தன்னை நினைத்துத்தான் சொல்கிறாரென்பதை உணர்ந்துகொண்டான். புலவர் மறுபடியும் பேசலானர். “அரசன் நல்லவனாக இருந்தாலும் உடன் இருக்கும் மந்திரிகள் அவனைக் கெடுத்துவிடுகிறார்கள். வரி போடலாமா என்று அரசன் கேட்டால் தாராளமாகப் போடலாம் என்று தலையாட்டுகிறார்கள். குடிகள், அந்த அரசனே அண்டுவதற்குப் பயப்படுகிறார்கள்” என்று சொல்லி நிறுத்தினார்.