பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 1 தோரணவாயில் அப்பழுக்கற்ற களங்கமிலா வமிசத்தில் தோன்றியவர்களின் கதையை விளக்குவது அவதார புருஷன் என்ற புதுக்கவிதைக் காவியம். அங்குக் காணும் நால்வரும் காக்கும் கடவுளின் அமிசமாய்த் தோன்றிய கதாநாயகர்கள். "பாண்டவர் பூமி" அம்புலி வமிசத்தில் தோன்றியவர்களின் கதையை விளக்குவது. அம்புலி களங்கமுள்ளவன். களங்கமிலாப் பகுதிக்குக் குறிக்கோளாக இருப்பவர்கள் வெள்ளை நிறத்து வாரிசாகத் தோன்றிய உத்தமபுத்திரர்கள்-பாமரர் முதல் படித்தவர்கள் வரை போற்றும் பாண்டவர்கள். அம்புலியின் களங்கமுள்ள பகுதிக்கு குறிக்கோளாக நிற்பவர்கள் கண்ணிலான் வாரிசாகத் தோன்றிய கவுரமற்றவர்கள்-யாவரும் தூற்றும் கவுரவர்கள். பாண்டவர்கள் பால்நிற வண்ணனின் வாரிசாக இருப்பினும் தேவர்களின் அமிசமாகக் கோபக்கார முனிவர் வழங்கிய மந்திரத்தின் மூலம் கோதில்லா குந்தி தேவியின் வயிற்றில் உதித்தவர்கள். கவுரவர்கள் கற்புக்கரசி, காந்தாரியின் உள்ளத்தில் அழுக்கு ஆறாக ஓடிய அழுக்காற்றின் விளைவாக வெளிப்பட்ட மாமிச பிண்டத்தின் மூலம் தாழிகளின் வழியாக வந்தவர்கள். பாண்டவர்களின் பிறப்பு நேரிய வழியில் அமைந்தது; அவர்கள் வாழ்வும் நேரிய வழியிலேயே சென்றது. கவுரவர்களின் பிறப்பு கோணல் வழியில் குடம் மூலம் அமைந்தது. முதற்கோணல் முற்றும் கோணல் என்ற முதுமொழிக்கிணங்க அவர்கள் வாழ்வும் கோணலாகவே சென்றது. பாண்டவர் பூமி என்ற காவியம் பூமி பற்றிய வழக்கின் கதை. பூமி யாருக்குச் சொந்தம்? அஃது இறைவனுக்குத்தான் சொந்தம்! அது தனக்குத்தான் சொந்தம் என்று கொண்டாடிய மாவலிக்குப் பாடம் கற்பித்தான் இறைவன்-திரிவிக்கிரமாவதாரத்தின்