பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மூலம். இங்கு விழிஒளி இல்லானும் வெள்ளை வண்ணனும் விசித்திர வீரியனின் விழுதுகள். தந்தையின் சொத்து பிள்ளைகட்குப் பொது, இஃது உலக வழக்கு. இந்த சாதாரண உலக நீதியைக்கூட உணராமல் முரண்டு பிடிக்கின்றான் துரியன். இந்த முரண்பாடே ‘பாண்டவர் பூமி' என்ற கதையாக வளர்கின்றது. இதில் உபநிடதம் எனக் கருதத்தகும் கீதை பிறக்கவும் காரணமாகின்றது. திருதராட்டிரன் காந்தாரியையும், பாண்டு குந்தி, மாத்தியையும், விதுரன் அறவழி வாழ்ந்த உத்தமன் தேவகன் புத்திரியையும் மணந்தனர் என்று வாலியார் கூறுவர். வில்லிபாரதத்தில் விதுரனுக்குத் திருமணம் நடைபெற்றதாகக் குறிப்பு இல்லை. கண்ணன் தூது சென்ற சமயம் கண்ணன் விதுரன் குடிலுக்கு எழுந்தருளியபோது விதுரன் மனைவி வரவேற்றதாக வாலியில் குறிப்பு உண்டு. வில்லியில் அஃது இல்லை. விதுரன்தான், "சுருதி நீ எய்தற்கு என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்?"1 - என்று கூறியதாகக் குறிப்பு உள்ளது. விதுரன் மாணி என்பதுதான் வில்லியின் கருத்து. துரோணன், கிருபன் இவர்களின் பிறப்பு வரலாறுகள் விரிவாக விளக்கப்பெற்றுள்ளன. அவர்கள் அரச குடும்பத்தினருக்கு ஆசாரியர்கள் ஆன விவரங்களும் தரப்பெற்றுள்ளன. வில்லியினின்று இவை சிறிது வேறுபாடுகளுடன் காணப்பெறினும், காவியத்தின் கதையோட்டத்திற்கும் சுவைக்கும் துணை செய்வனவாக உள்ளன. விதுரனின் முற்பிறப்பு வரலாறு வில்லியில் இல்லை. வாலியார் தம் காவியத்தில் அதனை விவரமாகத் தருகின்றார். தருமதேவதையே மகரிஷி மாண்டவ்யரின் சாபத்தால் அம்பிகையின் அடிமைப்பெண் வயிற்றில் விதுரனாய்ப் பிறக்கின்ற செய்தி வில்லியில் இல்லை; வாலியார் இதனைத் தம் காவியத்தில் அமைத்திருப்பது காவியத்திற்குப் புது மெருகூட்டுவதாக அமைகின்றது. பெண் ஆணாகப் பிறக்கும் செய்தி ஒரு புதிர். 1. கிருட்டினன் தூது-78