பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோரணவாயில் 3 ஏந்திய கொள்கையார் சீரின் இடைமுறிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள்-899) என்ற குறளுக்கு விளக்கம்போல அமைந்துள்ளது தருமதேவதைக்கு ஏற்பட்ட சாபம். அம்பையின் வரலாறு பல மாற்றங்கள் பெற்றுள்ளன. அம்பை ஓர் இயைக்கியின் அருளால் சிகண்டியாகப் பிறந்தாள் என்பது வில்லியில் காணப்படுவது, பெண்ணாகப் பிறந்தவள் ஆணாக மாறுகின்றாள். ஆனால் பாண்டவர் பூமியில் அம்பை தவம் செய்து முருகனிடமிருந்து பெற்ற பூமாலையைப் பாஞ்சால மன்னனின் மாளிகை வாயிலில் மாட்டிவிட்டு மறைகின்றாள். முக்கண்ணனை நோக்கித் தவம் செய்ய அவன் இவள் முன் தோன்றி “இப்பிறப்பில் அவள் குறிக்கோள் நிறைவேறாது, இன்னொரு பிறப்பில் பீஷ்மன் உன்னால் மாய்வான்” என்று கூறி மறைகின்றாள். அம்பையும் அக்கினிப் பிரவேசம் செய்து மாய்கின்றாள். துருபதன் மகளாகப் பிறக்கின்றாள்; சிகண்டி என்ற பேர் பெறுகின்றாள். வளர்ந்தபின் வாசலில் கண்ட மாலையை சூடிக்கொள்கின்றாள். வீடுமனின் பகை வருமே என்ற கவலை துருபதனுக்கு. மகளைக் காட்டில் விட, அவள் ஒரு கந்தருவனைச் சார்ந்து அவனது சித்தால் சிகண்டி ஆண் ஆகின்றாள். அரண்மனை திரும்பியவளை மன்னன் ஆணாகக் கண்டு பரவசப்படுகின்றான். வீடுமன் பற்றிய பயத்தையும் விடுகின்றான். வாலியார் படைப்பில் தரும் வியாதனின் படைப்பு சீர்திருத்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. தருமவியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரன்; தோலுரித்து ஆட்டைத் தொங்கவிட்டு வாணிகம் செய்பவன் இவன்; கவுசிகன் எனும் அந்தணன் பழ நூல்களை ஆய்ந்து அறத்தை நுவலுபவன். கதையில் கசாப்புக் கடைக்காரன் அந்தணனுக்கு அறக்கருத்துகளை எடுத்துக் காட்டும் வாய்ப்பு பெறுகின்றான். இங்கு புலால் விற்பவன் புலவனாகப் பேசுகின்றான். ஊன் விற்கும் தொழில் உயிர்க்கொலையை அடிப்படையாகக் கொண்டது. இத்தொழில் புரிபவன்மீது பச்சாதாபப் படுவதாகக் கவுசிகன் கூறும்போது பதிலுத்தரமாகக் கறிக்கடைக்காரன் பேசுகின்றான் குறுநகையுடன்: