பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோரணவாயில் 5 படைக்கும் போதும் கவிஞர் வாலி தமக்கெனத் தாமாக ஒரு நியதியை வகுத்துக் கொண்டு காவியத்தைப் படைக்க முற்படுகின்றார். கம்பனார் படைத்தது போலவோ வில்லியார் படைத்தது போலவோ ஆர அமர உட்கார்ந்து கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்திக் காவியம் படைத்தவரல்லர் கவிஞர் வாலி. அப்பெருங்கவிஞர்கள் தம் படைப்பு முடிந்ததும் புலவர்கள் பொதுமக்கள் கூடிய ஒரு பேரவையில் தம் படைப்புகளை அரங்கேற்றம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. 'பாண்டவர் பூமி’ அகிலம் போற்றும் 'ஆனந்தவிகடனில்’ வாரந்தோறும் கோயில் பிரசாதம்போல சிறிது சிறிதாக வாசக அன்பர்கட்குக் கட்டுரைகளாகக் கிடைத்துக்கொண்டிருந்து. கிட்டத்தட்ட மூன்றாண்டு காலமாக அவை வரிசைப்படுத்தப் பெற்று நூல் வடிவம் பெற்றது. ஆதலால் பாண்டவர் பூமியைக் கட்டுரைக் காவியம் என்று திருநாமத்தால் வழங்கலாம். இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்தது. மூன்றிலும் அமைந்த கட்டுரை விவரங்கள்: முதற் பாகம்- 62 கட்டுரைகள் இரண்டாம் பாகம் 57 கட்டுரைகள் மூன்றாம் பாகம் -38 கட்டுரைகள் ஆக மொத்தம் 157 கட்டுரைகள் முதல் பாகம் தனி நூலாகவும், இரண்டு மூன்று பாகங்கள் சேர்ந்ததைத் தனி நூலாகவும் ஆனந்தவிகடன் வெளியீடாக நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றிலும் அவதார புருடனில் யுத்த காண்டம் ஒரே பாய்ச்சலில் முடிவு பெற்றது போல ஈண்டும் யுத்த காண்டத்தை அதே போக்கில் முடித்துக்கொள்கின்றார் வாலியார். பெரும்பாலும் வியாச பாரதத்தை அடியொட்டியே காவியம் அமைந்துள்ளது. இராஜாஜியின் 'வியாசர் விருந்தும்' ஒரு சிறிது உதவியிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. எனினும் பாரதியின் பாடல்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் (குறிப்பாக விட்டுசித்தனின் பாசுரங்கள்) இவற்றின் தாக்கங்களைப் பாண்டவர் பூமியில் காண முடிகின்றது. அவற்றை ஆங்காங்கு பல இடங்களில் காட்டியுள்ளேன். இந்த