பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவை கதிரவனிடமிருந்து ஒளியையும் வெப்பத்தையும் நேரே விழுங்குகின்றன. இந்த உலகில் தாவரங்களைத் தவிர வேறு எந்தப் பொருள்களும் பகலவனிடமிருந்து ஆற்றலைப் பெறும் திறனை அடையவில்லை. பூமியில் அழகு கொழிப்பதற்கு இதுவே காரணம். "செம்பொன்னை யுருக்கி வார்த்தாலெனக் காட்சி அளிக்கும் அந்திவான் செக்கரழகும், கொண்டல் கொண்டலாக ஒடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத்தண்புனல் மணற் கற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொருள்களின் அழகும், அவற்றில் பச்சைப் பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும், அவற்றினின்றும் அரும்பியுள்ள நகை மலரின் அழகும்" (திரு. வி.க. முருகன் அல்லது அழகு) நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. பாவேந்தரின் அழகின் சிரிப்பு என்ற நூல் ஓர் அழகுக் களஞ்சியம். இந்த அடிப்படையில் வாலியார் காட்டும் வருணனைகளைக் காண்போம். (1) (அ) கங்கைக் கரை: வேட்டை நடத்திய சந்தனு இளைப்பாற வருகின்றான் கங்கைக் கரைக்கு. அதே - கங்கைக் கரை; காகங்கள் - கரையும் கரை; கிரெளஞ்சங்கள் இரையும் கரை; பட்சி வர்க்கங்கள் - உறையும் கரை; பட்சி எச்சங்கள் இறையும் கரை!