பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு உலகியல் செயல்களுள் நகை முதலிய சுவைகளில் இன்பம் உண்டாதல் போல் அழுகை, இழிவரல், அச்சம், வெகுளி முதலியவற்றில் இன்பம் உளதாதல் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனால்தான் சுவை இலக்கண நூலார் உலகியலின்பத்தைச் சுவை என்று கொள்ளாமல் நாடகத்திலாவது காவியத்திலாவது அச்செயல்கள் நிகழும்பொழுது அவற்றைக் காண்டலும் கேட்டலும் செய்யும் நல்லறிவாளர் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளையே சுவை என்று அறுதியிட்டனர். உலகில் ஒரு தாய் தன் ஒரே மகன் இறந்ததைக் குறித்து அழுதலைக் கேட்குங்கால் நமக்குத் துயரம் உண்டாகின்றது. ஆனால் மேகநாதன் இறந்துபட்டபோது இராவணன் மண்டோதரி புலம்புவதாக உள்ள பாக்களைப் படிக்கும் போது அல்லது படிக்கக் கேட்கும்போது அளவிலா மகிழ்ச்சி உண்டாகின்றது. நாமும் அழுதுகொண்டே மகிழ்ச்சி அடைகின்றோம். அவலத்திலும் இன்பத்தைக் காண்பதால்தான் அப்பாக்களைப் பன்முறை படித்தும் கேட்டும் இன்புறுகின்றோம். ஒரு முக்கிய கருத்து துஷ்யந்தன்-சகுந்தலை வரலாற்றை எடுத்து கொள்வோம் () அவர்கள் மனத்தில் எழும் உண்மை உணர்வினால் அவர்களிடம் எழும் நேர்காட்சியே காதல் சுவையா? (2) துஷ்யந்தன் சகுந்தலை கதையை நாடகமாக நடிக்கும்போது அந்த நடிகர்களின் மனத்தில் கனவினோ டொத்த ஓர் உணர்வே (சாயுஜ்ய ஞானம்) காதல் சுவையா? (3) நாடகம் காணும் நல்லறிஞர் உள்ளத்தில் தமக்குத் துஷ்யந்தன்-சகுந்தலை முதலானவரோடு அபேதம் கற்பிப்பதனால் எழும் உணர்வே காதல் சுவையா? என்ற கருத்துகள் அறிஞர்கள் மனத்தில் எழுந்ததால் அவர்கள் ஆராய்ந்து நாடகம் காண்பவர்களின் மனத்தில் எழும் உணர்வே காதல் சுவை என்று அறுதியிட்டனர்.