பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

103


கவிதை பரந்த கடலெனக் காட்சி அளிக்கின்றது. எனினும், இடைக்காலத்தில் உண்டான பல கவிதைகள் சமயம்பற்றி அமைந்தனவாய் வெளி வந்துள்ளன. மற்றும், ஒவ்வொரு புலவரும் தாம் கொண்ட கருத்தை வலியுறுத்திப் பாடும் வகையில் சில பாடல்கள் அமைந்துள்ளன. சங்க கால இலக்கியங்களும் காவியங்களும் பலராலும் விரும்பி ஏற்கப்படுகின்றன. எனினும், ஆய்வாளர் ஒரு சிலர் தம் கருத்துப்படி அக் காவியங்கள் அமையவில்லையாயின், அவற்றை ஏற்க மறுப்பதோடு, ஒதுக்கித் தமிழ் இலக்கியங்கள் வரிசையில் வைக்கத் தகாதவை", என்று கூறும் அளவுக்குச் செல்கின்றனர். தவிர, இந் நாளில் மட்டுமன்றி இடைக்காலத்திலும் சமயப் போராட்டமும் பிற மாறுபாடுகளும் நாட்டில் நிகழ்ந்துகொண்டே இருந்தமையின், இலக்கியங்களும் அப் போராட்டங்களுக்கு இலக்காயின. இன்றுங்கூடச் சைவ வைணவர்களிடையில் அப் போராட்டம் இல்லை என்று சொல்ல முடியாது. பெரிய புராணத்தைத் தொட விரும்பாத வைணவரும், கம்ப ராமாயணத்தைப் படிக்க விரும்பாத சைவரும் இன்றைக்கும் நாட்டில் இல்லாமல் இல்லை. இரண்டும் ஒவ்வொரு சமயம் பற்றி எழுந்த நூல்களேயாயினும், அவற்றில் அமைந்த கவிதைப் பண்புகளை அறியவேண்டும் என்ற நல்லெண்ணம் சில சமயங்களில் நல்ல அறிஞர்களுக்குக்கூட உண்டாகாமற் போவதுதான் வியப்பாக உள்ளது. சைவ சமயத்தில் உள்ள நல்ல ஆய்வாளன் கம்பர் காவியத்தில் புகுந்து திறனாய்ந்து தேர்வானாயின், பல நல்ல உண்மைகள் புலப்படும். அதே போன்று, வைணவத்திறன் ஆய்வாளன் பெரியபுராணத்துள் புகுவாயிைன், பல புதையல்களைக் கொண்டு வரக்கூடும். எனினும், அந்த நிலை இன்னும் நாட்டில் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ் நாட்டில் அன்றும் இன்றும் திறனாய்வாளர்கள் குறைவு என்பது உறுதி. அதற்குக் காரணம். பெரியோர்கள் பாடிய கவிதைகளின் நலக்கேடுகளை ஆராயக்கூடாது என்ற ஒரு கண்மூடி வழக்கமே இந்நாட்டில் இருந்து வந்ததாகும். திருவாசகத்தை எடுத்து ஆராய்ந்து. அதுபற்றிய நலக்கேடு