பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

123


உவமைகள் கேட்க விரும்பத்தகாத வகையில் அமைகின்றன. பொருந்தா வகையில் சிலர் இரு பொருள்களைப் பொருத்த வழி ஆராய்வர். ஆனால் அவர் செயல் தோல்வியிலேதான் முடியும். எப்படிக் கவிதைப் பண்பும் அதன் நலனும் எல்லாராலும் எடுத்துக்காட்ட இயலாதனவோ, அப்படியே உவமை நலத்தை எடுத்துக் காட்டுவதுமாம். எனவே, உவமை எல்லாராலும் எளிமையாகக் கையாள முடியாத ஒன்றுதான். ஆயினும், கவியுள்ளம் படைத்து. கவிதை நலனே தன் வாழ்வின் நலன் என்று கருதி வாழும் மெய்ம்மைக் கவிஞனுக்கு இவ்வுவமை ஊற்றுப் பெருக்கென ஓடிவந்து உதவி செய்யும். அவன் கற்பனைக்கு இவ்வுவமைகள் மெருகு கொடுத்து மேன்மைப் படுத்தும். எனவே, உவமையைக் கவிஞனது ஒருசிறந்த கைவண்ணத் திறன் என்று கூறுவது பொருந்தும்.

உவமை காணாத பொருளைக் காட்டுவதற்குத்தான் உரியது எனச் சிலர் நினைப்பர் என்பதை மேலே கண்டோம். அது ஓரளவு உண்மைதான். ஆனாலும், அந்தக் காணாததைக் காட்டுவதற்கும் திறன் வேண்டாவா? எங்கேயோ வெளிநாட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியையோ, வெளிநாட்டில் உள்ள ஒரு பொருளையோ நம் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியைக் காட்டியும், நாட்டில் உள்ள பொருள்களைக் காட்டியும் ஓரளவு விளக்க முடியும். வகுப்பறையில் மாணவர் முன் ஆசிரியர் உலகப் பொருள்களைப் பல்வேறு உபகரணங்களின் துணை கொண்டே, ‘இது இவ்வாறு இருக்கும்’, ‘இவ்வாறு சுற்றும்’ என்றெல்லாம் எடுத்துக்காட்டி, காணாத - காண முடியாத பொருள்களை விளக்குவதும் இந்த உவமையின்பாற் படுவ தொன்றாகும். ஆனால், காணாததை விளக்குவது மட்டுமன்றி, வேறு பலவற்றையும் விளக்க உவமை பயன்படுகின்றது.

எத்தனையோ உவமத் தொடர்கள் நாட்டில் சாதாரண வழக்கத்தில் இருப்பதை நாம் அறிவோம். வேகமாகப் பாயும் ஒருவனைச் செயலால் ‘புலிபோலப் பாய்ந்தான்’ என்கின்றோம் ஆனால், புலியின் பாய்ச்சலை நேரில் கண்டவர் எத்தனை பேர்? மற்றும் காணாத்தைக் கண்டதைக் கொண்டுதான் விளக்குவது