பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

125


தாழ்வை உயர்வாக்குவர். கோபுரம் குப்பை மேடாகும்; குப்பை கோபுரம் ஆகும். இத்தகைய பெருந்திறன் கவிஞர் மாட்டு மிகுதியும் உண்டு. ஒன்றை மட்டும் இங்கே காணலாம்.

செல்வமும் வறுமையும் நாட்டில் நடமாடும் இருவகை வேறுபாடுகள். சிலர் செல்வம் பெற்றுச் சிறக்கின்றனர். சிலர், வறுமையுற்று வாடுகின்றனர். செல்வம் நலம் தருவதென்றும், வறுமை துன்பம் பயப்பதென்றும் நாம் நன்கு அறிவோம். செல்வத்தால் சிறக்க வாழ்வதும், வறுமையால் வாழ்விழந்து வாடுவதும், நாம் நாள்தோறும் காணுகின்ற காட்சிகள். செல்வம் என்பது இனிமை பயப்பது, வறுமை என்பது இன்னல் பயப்பது என்பது உலகில் மாற்றமுடியாத மேல்வரிச் சட்டம். ஆனால், புலவர் நாவில் -- அவர் காட்டும் உவமையில்- செல்வம் துன்பம் தருவதாகின்றது, வறுமை இன்பம் தருவதாகின்றது; இத்தகைய பொன் செய்யும் மருந்தைப் புலவன் எங்குப் பெற்றான்? ஆம். இந்த உவமை வழியிலேதான் அம்மருந்து கிடைத்தது.

செல்வம், இன்பம் தருவதுதான். ஆனால், அது கல்லாதவனிடம் சேரின் அதனால் அவனுக்கும் மற்றவருக்கும் விளையும் பயன் ஒன்றும் இல்லை. ஆனால் அதனால் துன்பமும், இல்லையோ? இதை ஒருபுறம் எண்ணிக்கொண்டிருக்க, மற்றொருபுறமும் நமக்குத் தெரிகின்றது. அதுதான் நல்லவர் பெற்ற நல்குரவு. வறுமை பொல்லாதவனிடம் சேர்ந்தால், அவன் அவ்வறுமை காரணமாகப் பல கொடுமைகள் இழைப்பான். ஆனால் அது நல்லவனிடம் சேருமாயின். அவன் அமைதி பெற்று வாழ்வான்; மற்றவர்மேல் சீற்றம் கொண்டு சிறுதொழில் புரியான். அதனால் யாருக்கும் நன்மையோ தீமையோ இல்லை. இதைத்தான் நாம் அறுதியிட்டு முடிவு செய்கிறோம். ஆனால் கவிஞன் அதனினும் மேலே ஒரு படி செல்கின்றான். அக்கவிஞன் கலையுள்ளத்துக்கு அத்தகைச் செல்வத்தின் தீமை, நல்லவன் நல்குரவினும் கொடுமை பயப்பது என்ற உண்மை புலனாகின்றது. அது உண்மைதானே! செல்வம் கல்லாராகிய அற்பரிடம் சேருமாயின், அதனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்