பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கவிதையும் வாழ்க்கையும்



உள்ளுறை உவமமும் இறைச்சியும் பெரும்பாலும் அகப் பொருளுக்கே உரியனவாகும். அகப்பொருளில் தலைவன், தலைவி, பாங்கி முதலானோர் பேசுகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் போற்றும் இடமும் உண்டு; பழிக்கும் இடமும் உண்டு. போற்றுவதைத் தாராளமாக நேருக்கு நேர் நின்று செய்யலாம். ஆனால், தூற்றுதலை அவ்வாறு செய்ய முடியாதே! யாரையுமே அவ்வாறு வெளிப்படையாகத் தூற்றி அறியாத தமிழ்க் கவிஞர் சமுதாயம், தவறிழைத்த தலைவனை எவ்வாறு அவன் மனைவி வாயிலாகவும் தோழி வாயிலாகவும் தூற்ற முற்படும்? அகப்பொருட் பகுதியே பெரும்பாலும் புலவர் நாட்டிய வழக்கானமையின், அதில் வருகின்ற பல பாத்திரங்களும் அவர் தம் கையிடைப்பட்டு, அவர் கூற்று வழிச் செயலாற்ற வேண்டுவனவே. அவர்கள் உள்ளுறையையும் இறைச்சியையும், தலைவனுக்கு முன் அவன் தவறை இடித் துரைத்து, அவன் வழி தவறு என்பதை விளக்கி, அவனை நேர்மை வழியில் திருத்தும் வகையிலே பயன்படுத்துகின்றனர். 'தலைவனைத் திருத்த இவர்கள் யார்?' என்று கேட்கலாம். வாழ்வில் பிரியாத வகையில் ஒம்படை கூறி உறுதியளித்து நின்ற தலைவன், தன்நிலை கெடுவானாயின், அவனைத் திருத்த அவனுடன் இருக்கும் இவ்விருவரைத் தவிர வேறு யார் உதவக் கூடும்? அவன் வாழ்வே அவள் வாழ்வு என்பதை நன்கறிந்த தோழி, தவறுகளைத் திருத்தாது விட்டு, நிலைமை நீட்டிக்கின், தலைவி மெலிந்து இறந்துபடவும் கூடுமே! அத்தகைய கொடுமையைத் தலைவன் செய்வானா? ஆம். செய்கின்றான். வேண்டுமென்றே அன்று; சூழ்நிலை காரணமாக. அச்செயலை விளக்கித்தடுத்து நிறுத்த இந்த உள்ளுறையும் இறைச்சியும் பயன்படுகின்றன.
கண்ணனைய காதலியுடன் பிரியா வாழ்வில் திளைக்க வேண்டிய காதலன், அவளை விட்டுப் பரத்தையரை நாடிச் செல்கின்றான். பரத்தையர் என்பார், விலை மகளிராகி ஆடவரை மயக்கும் இயல்பு பெற்று, காசுக்காக அவரோடு கூடும் பண்பினர் என்பதை அறிகின்றோம். தலைவன் தன் வாழ்வுக்காகவே வாழும் தலைவியை விடுத்து, இத்தகைய காசு