பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

145



வழிக் கருத்திருத்தும் பரத்தையை நாடிச் செல்வனாயின், அவன் செல்வமும் புகழும்-ஏன் வாழ்க்கையும்கூட-ஒரு சேரப் பாழ்பட்டு அழியாவோ? அந்த அவலநிலையில் அனைத்தையும் காண்கின்ற தோழி, வாளாவிருக்க இயலுமோ? அவனுக்கு அறிவூட்டித் தெருட்டுகின்றாள். அப்போதுதான் இவ்வுள்ளுறையும் இறைச்சியும் உதவுகின்றன. தலைவனை நேர் நிறுத்தி, 'நீ இவ்வாறு பரத்தையர் வீட்டுக்குச் செல்லுதல் தக்கதன்று. இங்கேயே இரு'. என்று அவளால் கூற முடியுமா? கூறுவதுதான் நாகரிகமாகுமா? அதற்காகவே அவன் நாட்டில் உள்ளனவாகிய கருப்பொருள்களின் செய்கைகளைக் கூறி, அத்தகைய நாட்டுத் தலைவனே என விளித்து, மேல் வேறு பேசுகின்றாள் தோழி; அவனது நாட்டுப் பொருள் நிகழ்ச்சியில் தலைவன், செயலே உள்ளுறையாக அமைத்து, அப்பொருளை அவனுக்குப் புலப்படுத்துகின்றாள். நச்சினர்க்கினியர் காட்டிய உவமையை நாம் காண்போம்:

வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்த்ந் தூர்புகுந்த வரிவண்டு
ஓங்குய ரெழில்யானைக் கனைகடாம் கமழ்நாற்றம்
ஆங்கவை விருந்தாற்ற்ப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினுள் அரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர்!"

(கலித்தொகை 66)


இதில் உள்ளுறை உவமம் தோன்றுவதை நச்சினார்க்கினியர். "இதனுள் 'வீங்கு நீர்' பரத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த நீலப்பூக் காமர் செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர் பரத்தையரைத் தேரேற்றிக் கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப் பரத்தையர், தமது நலத்தை அத்தலைவனை நுகர்வித்தலாகவும், கங்குலின்-வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல்