பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

1. மண்ணும் விண்ணும்


லகில் பிறந்தவை அனைத்தும் வாழ்கின்றன; வாழ நினைக்கின்றன. நூறு வயதான தொண்டு கிழவனும் ‘உலகில் இன்னும் நெடிது வாழ வழி உண்டா?’ என்று சிந்தித்துக் கொண்டேதான் இருப்பான். ‘நெடுநாள் இருந்தபேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்’ என்று தாயுமானவர் இந்த நிலையை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, எப்படிப்பட்டவரும் நெடிதுவாழ விரும்புவர். மனிதன் மட்டுமன்றி உலகில் உயிர் வாழும் அனைத்தும் வாழவேண்டும் என்ற எண்ணத்திலே தான் இருக்கின்றன. அந்த எண்ணத்தில் தாம் செய்வதை ஆய்ந்தோய்ந்து பாராமலே, எப்படியாவது தாம் வாழ்ந்தால் போதும் என்ற நினைப்பில், தம் குழவிகளையே தின்று வாழ்கின்றன. சில உயிர்கள். கடலில் பெருமீன்கள் சிறு மீன்களைத் தின்று உயிர் வாழ்கின்றன என்பர். தவிர, தம் உயிர் வாழ்க்கையை எண்ணி, எப்படியாவது மற்றையவற்றை வருத்தியும் வாட்டியுங்கூட நிலைபெற வழிதேடுகின்றன. புல் பூண்டு, புழுப் பூச்சி முதலியனவுங்கூட அவற்றிற்கு விலக்காக மாட்டா. எப்படியும் அனைத்தும் நெடுங்காலம் உலகில் வாழவே விரும்புகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.