பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கவிதையும் வாழ்க்கையும்


ஆம்! வாழத்தான் வேண்டும். ஏன் வாழவேண்டும்? வாழ்க்கை என்பதுதான் என்ன? அவ் வாழ்க்கை என்று தோன்றிற்று? இத்தகைய கேள்விகளுக்கு ஒருவாறு விடை கூற இயலுமாயின், வாழ்க்கை வரலாற்றை ஒரு வகையில் அறிந்து கொள்ள முடியும். இன்று, இந்த இருபதாம் நூற்றாண்டின் இடையில், மனிதன் அனைத்தையும் கட்டியாள நினைக்கின்றான்: ஒரளவு கட்டியும் ஆள்கின்றான். மண்ணும் விண்ணும், நீரும் நெருப்பும், ஒரளவு அவன் வழி ஏவல் கேட்கின்றன. தனக்குக் கீழ்ப்பட்ட விலங்கினங்களும் பிறவும் மனிதனுக்கு அடங்கி நிற்பதைக் கண்டு அவன் பெருமகிழ் வெய்துகின்றன். தன் அறிவின் எல்லையில் அகப்படுகின்ற அனைத்தையும் கட்டி ஆள வேண்டுவதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்று திட்டமிட்டுக் கொண்டே மனிதன் தன் வேலையில் கண்ணும் கருத்து மாயிருக்கின்றான். அப்படித் தன் அறிவினைக்கொண்டு ஆராயும் போது, அவன் தன் ஆதிவாழ்க்கையைப் பற்றியும் ஒரளவு அறிந்து கொள்ளுகின்றன். அந்த ஆதி வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதையும், காண முடிகின்றது. அவ்வாறு காணும் காலத்தில் கழிந்த நெடுங் காலத்தையும், ஒழிந்த உயிர்த்தோற்ற வகைகளையும் எண்ண நேரிடுகின்றது. அந்த எண்ணத்தின் இடையில் ஒரு பெருமூச்சு உருப்பெற்று எழும் என்பது உறுதி.

அறியா மனிதர்கள். ‘ஏதோ பிறந்தோம், வாழ்கின்றோம்!’ என்ற அந்த அளவில் காலத்தைக் கழித்துக் ‘கண்டதே காட்சி: கொண்டதே கோலம்’, என்றபடி எப்படியோ வாழ்ந்து கழிந்து விடுவதைக் காண்கின்றோம். ஆனால், முன்னும் பின்னும், நோக்கி, உயிரினத்தின் வாழ்க்கை வரலாற்றை எண்ணும் ஒருவன், தன் வாழ்நாள் எத்துணை நொடியளவில் உள்ளது என்பதையும், தன் பரந்த உலகமே அணுவினுள் அணுவான ஒன்று என்பதையும் நன்கு உணர்ந்து கொள்வான். அனைத்தையும் ஆராய வேண்டும் என்ற உள்ளத்தோடு, ஆய்வுக்களத்தில் அமர்ந்து அல்லும் பகலும் உழைக்கும் ஒருவன். இவ்வாறு இன்று விஞ்ஞான வழியில் கண்ட உண்மையை நம் கவிஞர்கள்