பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

175


 கள். திருவள்ளுவர் இதைத்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். எல்லா மனிதருக்கும் என்றோ வேறு வகையாகவோ கூறியிருந்தால், அதில் நாம் வியத்தற்கு ஒன்றுமே இராது. உயிர்த் தத்துவத்தை அவர் கூறியுள்ள ஒன்றே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இதைப்போன்றே மணிவாசகனார் தம் உயிர்மேல் வைத்து உயிர்த்தோற்ற வளர்ச்சியின் தத்துவத்தைக் கூறியிருப்பதும் வியத்தற்குரியதாகும். இக் கருத்தைத்தான் ஆசிரியர் தொல்காப்பியனாரும் பொருளியலில் குறிக்கின்றார்.

"எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வருஉம் மேவற் றாகும்.'

(28)

என்பது தொல்காப்பியம், அச்சூத்திரத்திற்கு உரை கூறவந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர், 'அறமும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான், மக்களும் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய எல்லா உயிர்களுக்கும் மனத்தின்கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயினும், ஆணும் பெண்ணும் என அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும்' என்றும், " 'மேவற்றாகும்' என்றார், என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின், ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தா ரெனப்படாது. அவ்வின்பம் எல்லா வுயிர்க்கும் பொது என்பதூஉம், அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்து மென்பதூஉம் கூறிய வாறாயிற்று." என்றும் எழுதி வைத்துள்ளார். இச் சூத்திரத்தாலும் இதன் உரையாலும் பல உண்மைகள் வெளிப்படுகின்றன. மாவும் புள்ளும் முதலிய எல்லா உயிர்களும் என்றமையான், மரம் முதலியனவும் அடங்குகின்றன. ஆகிய என்று வரையறுக்காது, முதலிய என்று கூறிய மாத்திரையானே, எல்லா உயிர்களும் அடங்காவோ. எனவே, புல் முதல் மனிதன் வரையில், வாழும் அத்தனையும் உயிர் பெற்றவை என்பதும், அவற்றுக்கும் இன்பத்தைத் துய்த்து அறியும் ஆற்றலும் தன்மையும் உண்டு என்பதும், அவற்றுள் ஆண் பெண் என்ற வேறுபாடுகளும் உண்டு என்பதும் நன்கு விளங்குகின்றன. புல்லிலும் மரத்திலுங்கூட