பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கவிதையும் வாழ்க்கையும்


நினைத்த பொருளை நன்கு அதில் விளங்கவைத்து, முடிய நாட்டலே யாப்பின் முற்றிய விளைவாகும் என்பது அவர் கருத்து. ஆகவே, யாப்பு என்பது பொருளை உயிர் நாடியாகக் கொண்டு,இயங்கும் ஒன்று என்பது நன்கு புலப்படும். . இதை நன்கு பயில்வோர் உளங் கொள்ளுமாறு ஆசிரியர் தொல்காப்பியனர்,

“ எழுத்து முதலா ஈண்டிய அடியில்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிய யாப்பறி புலவர். -பொருள் 384

என்கிறார். அவ்வாறு சொல்லும்போது மிக எச்சரிக்கையாய் இருக்கின்றார். இவ்வாறு வரையறுத்துச் சொல்லுவதும் யாவருக்கும் எளியதன்று. தாமே அவ்வாறு சொன்னதாகச் கூறிக்கொள்ளவும் அஞ்சுகின்றார் அவர். நிரம்பக் கற்றார் இயல்பு அதுதானே? தெரியாதனவற்றையெல்லாம் தெரிந்தனவாகக் காட்டிப் பறையறையும் குறைகுடங்கள் போலன்றி, கற்றுத் துறைபோய வல்லவராகிய தொல்காப்பியர், இவ்வாறு யாப்பறி புலவர் சொல்லுகின்றனர்' என்று குறிக்கும்போது யாப்பின் ஏற்றம், இன்னும் சிறந்து விளங்குகின்ற தன்றோ! ஆகவே, யாப்பு ஒன்றப் பாட்டிசைத்தல் எளிதன்று. இதை எண்ணித்தான் காரிகை கற்றுக்கவி பாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே,’ என்று பிற்காலத்தவர் பாடினர் போலும் பாவம்! அவர் அடிப்படையை அறியாது அலமந்தவர் என்றுதான் கூறவேண்டும்.

தமிழ்நாட்டுப் பழைய பேரிலக்கணம் தொல்காப்பியந்தான். எனினும், அத்தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் என்ற ஒர் இலக்கண நூல் இருந்ததென்பதையும் அனைவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். ஆசிரியர் தொல்காப்பியரும் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் சிறந்தவர் என்பதும் ஏற்றுக்கொண்ட வரலாறே. எனினும், தொல்காப்பியத்துக்கு முதனூலாகிய அகத்தியத்தின் முழுப்பகுதியும் கிடைக்கவில்லை;