பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

கவிதையும் வாழ்க்கையும்


விலங்கின் அமைப்பின் எல்லையில் தோன்றியவன் மனிதன். மேலை நாட்டு ஆராய்ச்சியாளரான ‘டார்வின்’[1] கொள்கைப்படி, மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பர். பலர் இத்துறையில் தம் கருத்தைச் செலுத்தி நல்ல ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளனர். நம் தொல்காப்பியரும், ‘மாவும் மக்களும்’ பிணைக்கத் தக்கன என்னும் அளவில் குறித்துச் செல்கின்றார். ஆகவே, இதுபற்றி யாருக்கும் ஐயம் எழ இடமே இல்லை. ‘மனித வளர்ச்சி’[2] என்ற ஆங்கில நூலில் அதன் ஆசிரியர் மனிதனது ஒவ்வோர் உறுப்பும் எப்படி விலங்கினத்திலிருந்து வேறுபட்டு வளர்ச்சி அடைந்தது என்பதைக் காட்டுகின்றார். உறுப்புக்களில் மட்டும் மாற்றம் காண்பதோடு உணர்வு பிறக்கும் மனத் தோற்றத்தையும் மனிதப் பண்பாட்டின் மாற்றமெனத் தொல்காப்பியர் குறித்துள்ளார். ‘ஆறறி வதுவே அவற்றொடு மனனே’, என்று காட்டி, அந்த மன அறிவே மனிதனை மற்றவற்றிலிருந்து பிரித்துக் காட்டுகிறது என்பதையும் விளக்கிவிட்டார். ‘உறுப்பு ஒத்தல் மக்களொப் பன்றால்’, என்ற வள்ளுவர் வாக்கும் அது பற்றி எழுந்ததாய் இருக்கலாம். எனவே, மனிதன் பிற உயிரினத்தைப் போன்று உறுப்புக்களைப் பெற்றதோடு மனமும் பெற்றவனாகின்றான். நீரில் நீந்தியும் நெளிந்தும் வாழ்ந்து, தரையிடைத் தவழ்ந்தும் ஊர்ந்தும் வளர்ந்து, எட்டுக்கும் எட்டுக்கு மேற்பட்டும் கால்களைப் பெற்றுக் குறு நடையிட்டு, பின் நான்கு கால்களால் விலங்காகி நடந்து, இன்று இறுதியில் இரு கால்களால் நடக்கும் மனிதன், மற்றவற்றினும், தான் வேறுபட்டவன் என்பதைத் தன் மன அறிவு மூலமே எடுத்துக் காட்டுகின்றான். அவனது வளர்ச்சியையும் வாழ்க்கையையுமே நாம் அறிதல் வேண்டும்.

இதுகாறும் கூறியவற்றால் நீரிலும் நிலத்திலும் உயிர்கள் எவ்வெவ்வாறு தோன்றின என்பதும், அவற்றின் தோற்றக் காலங்கள் எவ்வெவ்வாறு அமைந்தன என்பதும், அவ்வுயிர்த்


  1. Darwin
  2. The Evolution of Man