பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

கவிதையும் வாழ்க்கையும்


தொடங்கியிருப்பான். காட்டிலும், சோலையிலும், மலையிலும் விலங்குகளோடு விலங்காய் வாழ்ந்த அவன், ஒரு மூலையில் உட்கார்ந்து எண்ணியிருப்பான். அவன் எண்ணத்தின்வழி தன்னைப்பற்றிய உணர்வு பிறந்திருக்கும். அந்த உணர்வு அவனுக்கு, தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தைத் தோற்று வித்திருக்கும். ஆகையால், அவன் பிற விலங்கினின்றும் வேறு பிரிந்து வாழ எண்ணியிருப்பான்; அதற்கெனத் தனிக் குகைகளை நாடி வாழ்ந்திருப்பான்; பின்னர் அந்தக் குகைகளைப் போன்றே குடிசைகளைக் கட்டக் கற்றுக் கொண்டிருப்பான். அக்குடிசை வாழ்வே முதலாவதாக அவனை விலங்கினின்றும் வேறு பிரித்து வைத்திருக்கும்.

உணவு வகையிலேயும் அவன் உள்ளம் சிந்தனை செய்திருக் கும். எப்படியோ சுற்றித் திரிந்து, எதையோ தேடி அந்த வேளைக்கு உண்டநிலை போக, கிடைத்ததைக் கொண்டுவந்து தான் அமைத்த குடிசையில் வைத்துக்கொண்டு, பசி எடுத்த போது உண்ணப் பழகியிருப்பான் அவன். அந்தப் பழக்கத்னாலேயும் அவன் விலங்கினத்திலிருந்து நெடுந்தூரம் வந்து விட்டிருப்பான். எறும்பு போன்ற சில உயிர்ப் பொருள்கள் தம் உணவுப் பொருளைச் சேர்த்து வைப்பது என்பது உண்மைதான். எனினும், விலங்கினம் அப்படி என்றும் தனது நாளை வாழ்வைப் பற்றி எண்ணி அதற்கென ஆயத்தம் செய்யும் வழக்கம் இல்லையே! ஆம்! மனித வாழ்வின் விடி வெள்ளியாய் "நாளை வாழ்வு' என்ற உணர்வு பிறந்தது. ‘நாம் இன்று மட்டுமன்றி, நாளையும் வாழப் போகின்றோம். எனவே, நாளைக்கென்று நாம் சேர்த்து வைக்கத்தான் வேண்டும்’, என்ற எண்ணம் மனிதனை விலங்கினத்திலிருந்து இன்னும் நெடுந்துாரம் கொண்டுவந்து விட்டது எனலாம்.

இவ்வாறு தனித்து வாழ விரும்பிய மனிதன், தன்னை மற்றவற்றினிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள விரும்பியிருப்பான் அல்லனே தன்னைப் பற்றியும், நாளையைப் பற்றியும் நினைக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்ட மனிதன், வாழும் பொருட்டுத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்திருப்பான்.