பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

203



கொதிக்கும் வெயிலுக்கும். கொட்டும் மழைக்கும் அஞ்சித் தனித்துக் குடிசை அமைத்துக்கொள்ள அவன் மனம் அறிவுறுத்தியிருக்கும். கண்டதைக் கொல்லும் காட்டு விலங்குகளிலிருந்து அவன் தனியே வாழவும் விரும்பியிருக்கக் கூடும். ஆம்; எப்போது, 'தான் என்ற உணர்வும், "நாளை. தனது' என்ற எண்ணங்களும் தோன்றிற்றோ, அப்போதே தனித்து வாழவேண்டும் என்ற உணர்வு பிறந்திருக்க வேண்டும். அந்தத் தனித்த வாழ்வின், உணர்வின் பயனே இன்று மாட மாளிகைகளாகவும், நாடு நகரங்களாகவும், நமக்குக் காட்சியளிக்கின்றன. அன்றைய சிறு குடிசைகளின் தொடக்கமே இப் பெரிய அரண்மனைகளுக்குக் கால்கோட் கட்டடங்களாய் அமைந்தன எனலாம். தனியே உட்கார்ந்த மனிதனுக்கு மேலும் சிந்தனை செய்வது இயல்புதானே!

குடிசை அமைத்து, பிற விலங்குகளால் கொடுமை நேராதபடி அதற்கு வாயில் அமைத்து, அதை மூடவும் கற்றுக் கொண்ட மனிதன், மேன்மேலும் சிந்திக்கத் தொடங்கினான். வெளியே செல்லும் காலத்து வெறுங் கையோடு சென்றால், பிற மிருகங்கள் தனக்குத் தீங்கிழைக்கும் என்பதை அவன் உணர்ந்தான். அந்தக் கொடுமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த எண்ணத்தில், தனக்கு ஆயுதங்கள் தேவை என்ற நினைப்புப் பிறந்திருக்கும். அந்த நினைவின் வழியே, தன் கையில் அகப்பட்ட கல்லையும் முள்ளையும் தனக்கு ஆயுதங்களாகப் பயன்படுத்தியிருப்பான். கூரிய கற்களையும், மிருகங்களின் கூரிய எலும்புகளையும், பிற முட்களையும், அவன் தனக்கு ஆயுதங்களாக அந்தக் காலத்தில் உபயோகித்திருப்பான். பிறகு அந்தக் கல்லையும் முள்ளையும் கூர்மையாகத் தீட்டிக் கொள்ளக் கற்றுக் கொண்டான் அவன். அதன் மூலமே ஆயுதங்கள் உலகில் உண்டாயின என்று கொள்ளவேண்டும்.

ஆயுதங்களுக்காக மட்டுமன்றி, உணவு முதலியன சேமித்து வைப்பதற்கும் கற்பாத்திரங்களை அவன் பயன்படுத்தியிருக்கக்கூடும். குழிந்த சுனைகளிலும், கற்பாறைகளிலும் மழை பெய்யும் காலத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதைக் கண்ட